மூதூர் – பெருவெளி அகதிமுகாம் படுகொலையின் 37வது நினைவேந்தல்

தமிழர் பிரதேசமான கிழக்கு மாகாணத்தின் மூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும், உயிரிழந்த பொது மக்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டு, பொதுச்சுடரினை ஏற்றிவைத்ததுடன், இலங்கையின் வடக்கு, கிழக்கில் இதே 16ஆம் திகதி ஆடி மாதம் 1989ஆம் ஆண்டில் தமிழ் மக்களை இலக்குவைத்து பல்வேறு கிராமங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றமை தொடர்பான நினைவுரையையும் நிகழ்த்தியிருந்தார்.

இந்த பூஜை நிகழ்வில் உயிர் நீத்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுக்களின் உறுப்பினர்கள், பல்வேறு சங்கங்களின் அங்கத்தவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருகோணமலை – மட்டக்களப்பு  A15 பிரதான வீதியின் மல்லிகைத்தீவு சந்தியில் இருந்து 500 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெரியவெளி பாடசாலை அகதி முகாமில் பாரதிபுரம், மல்லிகைத்தீவு, மணற்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாடசாலை கட்டடத்திலும் அவ்வளாகத்தினுள் ஓலைக் கொட்டில்கள் அமைத்தும் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், ஜூலை 16ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் மணற்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களில் இருந்த மக்கள் 300க்கும் மேற்பட்ட சிங்கள  கூலிப் டையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, சுட்டும் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 44 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

கிராமத்துக்குள் நுழைந்த குறித்த ஆயுததாரிகளால் வீடுகளில் இருந்தவர்களில் 25 ஆண்களும் 2 பெண்களும் படுகொலை செய்யப்பட்டதுடன், பெருவெளி அகதி முகாமில் தஞ்சம் அடைந்திருந்த மக்களை சுற்றிவளைத்து அங்கிருந்த 17 ஆண்களை ஒன்று திரட்டி ஓரிடத்தில் முழந்தாலிட வைத்து, குடும்பத்தினர் கண்ணெதிரே சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அத்துடன் அன்றைய தினம் அங்கிருந்த 11 பேர் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களில் 8 பேர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். மற்றைய 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டு சில வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 17 பேரின் சடலங்களும் கட்டைபறிச்சான் GPS இராணுவ முகாமில் வைத்து பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம்

  1. இராசையா செல்லத்துரை – பாரதிபுரம்
  2. ஆரியத்தம்பி சிவசுப்ரமணியம் – பாரதிபுரம்
  3. சித்திராவி கனகய்யா – பாரதிபுரம்
  4. முத்துக்குமார் சிவநாயகமூர்த்தி – பாரதிபுரம்
  5. இராசையா குமாரதுரை – பாரதிபுரம்
  6. வேலுப்பிள்ளை ஆறுமுகம் – மல்லிகைத்தீவு
  7. கோணாமலை இராசநாயகம் – மல்லிகைத்தீவு
  8. கதிரவேல் நாகேந்திரம் – மல்லிகைத்தீவு
  9. கோணாமலை வீரக்குட்டி – மல்லிகைத்தீவு
  10. கதிர்காமத்தம்பி வைரக்குட்டி – மல்லிகைத்தீவு
  11. வெற்றிவேல் குணசிங்கம் – மல்லிகைத்தீவு
  12. சித்திரவேல் குணசிங்கம் – மல்லிகைத்தீவு
  13. சித்திரவேல் ஜெகன் – மல்லிகைத்தீவு
  14. சித்திரவேல் பத்தக்குட்டி – மல்லிகைத்தீவு
  15. ஆலப்பிள்ளை – மல்லிகைத்தீவு
  16. செல்லையா சுந்தரலிங்கம் – மல்லிகைத்தீவு
  17. பொன்னையா – மல்லிகைத்தீவு
  18. மாரிமுத்து சிறிகந்தராசா – மல்லிகைத்தீவு
  19. வைரமுத்து வைரக்கட்டயன் – மல்லிகைத்தீவு
  20. மாரிமுத்து யோகராசா – மல்லிகைத்தீவு
  21. சி. மகேந்திரன் – மணற்சேனை
  22. வீரக்குட்டி மயில்வாகனம் – மணற்சேனை
  23. செல்லையா சித்திரவேல் – மணற்சேனை
  24. வடிவேல் நவரெட்ணராசா – மணற்சேனை
  25. இராசகுலம் – மணற்சேனை
  26. வைரமுத்து குணசேகரம் – மணற்சேனை
  27. அழகுதுரை சத்தியசீலன் – மணற்சேனை
  28. செல்லத்தம்பி தர்மராசா – மணற்சேனை
  29. கந்தவனம் கமலம் – மணற்சேனை
  30. சிவசுப்ரமணியம் யோகதாஸ் – மணற்சேனை
  31. பத்தக்குட்டி கனகநாயகம் – மணற்சேனை
  32. மகேந்திரன் – மணற்சேனை
  33. சின்னத்துரை குணநாயகம் – பெரியவெளி
  34. கந்தையா தங்கராசா – பெரியவெளி
  35. காளிக்குட்டி அருளம்பலம் – பெரியவெளி
  36. பசுபதி மோகனதாஸ் – பெரியவெளி
  37. சேதுநாதன் கோணாமலை – பெரியவெளி
  38. தம்பிமுத்து தங்கராசா – பெரியவெளி
  39. தியாகராசா வடிவேல் – பெரியவெளி
  40. நாகராசா சரஸ்வதி – பெரியவெளி
  41. பத்தக்குட்டி மகாலிங்கம் – பெரியவெளி
  42. பத்தக்குட்டி யோகராசா – பெரியவெளி
  43. பிரான்சிஸ் மார்டின் – இருதயபுரம்
  44. அரசரெட்டினம் ஆலப்பிள்ளை – புன்னையடி, ஈச்சிலம்பற்று.