அதிகரிக்கும் வெப்ப நிலை – விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு அறிவிப்பு

அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடும் வெப்பநிலையால் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், கடந்த சில வாரங்களாக நாட்டின பல பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை
நிலவுகிறது.

இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று திங்கட்கிழமை கவனத்துக்குரிய மட்டத்துக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மன்னார், வவுனியா, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் கிழக்கு, வடமேற்கு, வடமத்திய, மேல் மாகாணங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்துக்குரிய அளவில் இருக்கும்
என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் இயன்றவரை ஓய்வெடுத்தல், கடுமையான வெளிச் செயல்பாடுகளை கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.