அனைத்துலக இராஜதந்திர நடைவடிக்கைகளுக்கான பொது அமைப்பு அவசியம் – மட்டு நகரான்

b1 அனைத்துலக இராஜதந்திர நடைவடிக்கைகளுக்கான பொது அமைப்பு அவசியம் - மட்டு நகரான்கிழக்கு மாகாணம் என்பது தென் தமிழீழம் என்ற மிகமுக்கியத்துவம்வாய்ந்த ஒரு பகுதியாக தமிழர்களினால் நோக்கப்படுகின்றது.கிழக்கு வடக்குடன் இல்லை கிழக்கு தனித்துவமானது என்பது காட்டுவதற்கான முயற்சிகள் இன்று சிங்கள பேரினவாத சக்திகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கிழக்கு மாகாணத்தினை கூறுபோட்டு தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதனை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையே இருந்துவருகின்றது.

இன்று வடகிழக்கில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலுக்காக பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்காக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை காணமுடிகின்றது.

குறிப்பாக வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் தேசிய சக்திகளும் தமிழ் தேசியம் சார்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் மும்முரமாக செயற்பட்டுவருகின்றனர்.இவர்கள் இந்த விடயத்தில் காட்டும் மும்முரத்தினை கிழக்கில் தமிழர்களின் நெருக்கடிகளில் காட்டுவதில்லையெற கவலை கிழக்கில் தமிழர்களுக்கு இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் தமிழர்களின் இருப்பு தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக எழுதிவருகின்றோம்.

b2 அனைத்துலக இராஜதந்திர நடைவடிக்கைகளுக்கான பொது அமைப்பு அவசியம் - மட்டு நகரான்சிலர் நினைக்கலாம் ஒரே விடயத்தினை மீண்டும் மீண்டும் எழுதுவதனால் என்ன பயன் என்று.ஒரு விடயம் மீண்டும் மீண்டும் பேசப்படும்போதே அதற்கான தீர்வுக்கான முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்படும் என்பதை நான் நம்புகின்றேன்.ஒரு பிரச்சினை தீர்க்கப்படுமானால் அல்லது ஒரு பிரச்சினை குறித்து பேசப்படுமானால் நாங்கள் அது தொடர்பில் தொடர்ந்து எழுதவேண்டிய தேவையிருக்காது.

ஆனால் கிழக்கில் பல பிரச்சினைகள் எழுகின்றபோதும் அது தொடர்பில் பேசுவதற்கு பின்னடிக்கும் நிலைமைகள் என்பது கிழக்கில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குட்படுத்தும் என்பதே எனது நிலைப்பாடாகவுள்ளது.
இன்று மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் 230 நாளையும் தாண்டி தமது நிலத்தினை மீட்பதற்காக தொடர்ந்து போராடிவரும் நிலையில் அது தொடர்பில் இன்று பேசும் நிலைமையினை காணமுடியாத நிலையே காணப்படுகின்றது.இதுஒரு ஆபத்தான விடயமாகவே காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெடுகல்மலை பகுதியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜெகம்பத் தலைமையில் அடிக்கல் நடப்பட்டுள்ளது.நெடுகல்மலை கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமுனை பகுதியில் இந்த நெடுகல்மலை பகுதி காணப்படுகின்றது.
இந்த பகுதி தமிழர்களின் பாரம்பரிய பகுதியாகும்.இங்கு தொல்பொருள் பகுதியாக கடந்த காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டு அப்பகுதியில் தமிழர்கள் செல்லமுடியாத நிலையேற்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று அங்கு விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நெடுகல்மலை பகுதியை சூழ தமிழர்கள் வாழ்ந்துவரும் நிலையில் அப்பகுதியில் தற்காலிகமாக இராணுவமுகாம் அமைக்கப்பட்டு அந்த இராணுவத்தின் உதவியுடன் இந்த விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே புனாணை பகுதியில் நூறு வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் அதுவும் புனாணை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருந்த இராணுவமுகாமில் இராணுவத்தின் வழிபாட்டிற்காக விகாரையொன்று அமைக்கப்பட்டு இன்று அந்த விகாரையில் பௌத்த பிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டு இன்று அது ஒரு பௌத்த விகாரையாக செயற்பட்டுவருவதுடன் அப்பகுதியில் சிங்களவர்களை குடியேற்றும் செயற்பாடுகளும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பில் கிழக்கில் இதுவரையில் யாரும்பேசியதாக தெரியவில்லை.தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவோரும் இது தொடர்பில் பேசியதாகயில்லை.தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சுரேஸ் மட்டும் இது தொடர்பான தகவல்களை அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் அவரது கடமை முடிந்ததுபோன்று செயற்படும் நிலைமையே காணப்படுகின்றது.

தையிலிட்டியில் விகாரை அமைத்துமுடிந்த பின்னர் எதிர்ப்பு போராட்டங்களை வெறும் கண்துடைப்புக்காக நடாத்துவதுபோன்று தமிழ் தேசிய கட்சிகள் செயற்படும் நிலைமையே கிழக்கிலும் காணப்படுகின்றது.இந்த நிலைமையானது கிழக்கு தமிழர்களின் இருப்பினை முற்றுமுழுதாக கேள்விக்குட்படுத்தும் வகையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியினை சூழ்ந்த வகையில் திட்டமிட்ட குடியேற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு புறம் மயிலத்தமடு,மாதவனையில் மறுபுறம் நெடுகல்மலை,புனானை என தொடர்ச்சியாக இந்த அத்துமீறிய குடியேற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் நடவடிக்கையெடுக்கவோ பேசவோ யாரும் இல்லாத சூழ்நிலையே காணப்படுகின்றது. மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காணிகள் அடைக்கப்பட்டு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லமுடியாத சூழ்நிலையேற்படுத்தப்பட்டுள்ளது. சிங்கள அத்துமீறிய குடியேற்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நிலையிலும் பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராடிவரும் சூழ்நிலையே காணப்படுகின்றது. ஆனால் இன்று பண்ணையாளர்கள் தனியாக நின்றே போராடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் பண்ணையாளர்களுடன் நின்று போராட்டங்களை நடாத்திய தமிழ் தேசிய அரசியல்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் இன்று அவர்களின் போராட்டத்தினை கருத்தில்கொள்ளாத நிலையே காணப்படுகின்றது.

b3 அனைத்துலக இராஜதந்திர நடைவடிக்கைகளுக்கான பொது அமைப்பு அவசியம் - மட்டு நகரான்வடகிழக்கு மாகாணத்தில் அவர்களின் போராட்டத்திற்கான குரல்கள் ஓய்ந்த நிலையில் தனிமையில் நின்று போராடிவருகின்றனர். அவர்களின் காணிகளில் தொடர்ச்சியாக அத்துமீறல்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலும் தமது உரிமைக்காக போராடிவருகின்றனர்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே உள்நுழையமுடியாத மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த சிங்கள பெரும்பான்மையினத்தவர்கள் இலகுவாக வந்து காணிகளை பிடிக்கும் ஏற்பாடுகளை பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் முன்னெடுக்கும் நிலைமையே காணப்படுகி;னறது.குறைந்தது இதனை தடுப்பதற்கு கால்நடை பண்ணையாளர்களுடன் இணைந்து போராடுவதற்கு கூட யாரும் அற்ற நிலையிலேயே தமிழர்கள் உள்ளார்கள் என்பது எவ்வளவு கவலையான விடயம் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

இதன்காரணமாக வடகிழக்கு இணைந்த கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். ஜனாதிபதி தேர்தலை ஒட்டி மிகவேகமாக உருப்பெற்றுள்ள வடகிழக்கு மாகாணசிவில் கட்டமைப்பானது தமிழர்களின் பிரச்சினைகளையொட்டி உருவாகியிருந்தால் அது தொடர்பில் நாங்கள் நம்பிக்கைகொள்ளமுடியும்.ஆனால் ஒரு தேர்தல் அரசியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பினால் தமிழர்களின் தமிழ் தேசியம்சாhந்த பிரச்சினையை பேசமுடியுமா என்பது கேள்வியாகவே உள்ளது.

இன்று கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டு தென்னிலங்கையினை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில் மறுபுறம் அத்துமீறிய காணி அபகரிப்புகளும் திட்டமிட்ட குடியேற்றங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் இனப்பரம்பலை சிதைப்பதற்கு முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடுகளை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள தடுத்து நிறுத்துவதற்கு ஒரு கட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
இன்று சர்வதேசத்திற்கும் வடகிழக்கு மக்களுக்கும் உண்மையான விடயங்களை எடுத்துக்கூறுவதற்கு உளமார்ந்த சிவில் அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதன் மூலமே நாங்கள் உண்மையான நம்பிக்கையினை பெற்றுக்கொள்ளமுடியும்.