அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பவனியாக யாழிலிருந்து புறப்பட்டது

9 4 அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பவனியாக யாழிலிருந்து புறப்பட்டதுஅன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனி யாழில் இருந்து நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவிடத்தில் தியாக தீபத்திற்கும் அன்னை பூபதிக்கும் அஞ்சலி செலுத்தி இந்த ஊர்தி பவனி ஆரம்பிக்கப்பட்டது. அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடராக நினைவுநாளின் 26 ஆவது நாளான நேற்று அக்கட்சியின் ஏற்பாட்டில் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனால் இந்த ஊர்தி பவன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவு தூபியில் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தியமையைத் தொடர்ந்து, தியாகி அன்னை பூபதியின் ஊர்திக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தி யாழில் இருந்து பவனி ஆரம்பமாகியது.

நேற்று ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தொடர்ந்து வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பல இடங்களுக்கும் சென்று, கடைசியில் நினைவேந்தலின் இறுதிநாளில் மட்டக்களப்பில் உள்ள அன்னை பூபதியின் நினைவுத்தூபிக்குச் சென்று நினைவேந்தலுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.