அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சமும் கொள்ளத் தேவையில்லை – ஜனாதிபதி ரணில் உறுதி

ranil 2 அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் அச்சமும் கொள்ளத் தேவையில்லை - ஜனாதிபதி ரணில் உறுதி“சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும். அரசமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில், “1931 ஆம் ஆண்டில் ஆசியா, ஆபிரிக்காவில் முதல் முறையாக இலங்கையே சர்வஜன வாக்கெடுப்பு அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டது. வேறு எந்த நாட்டுக்கும் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் சில பகுதிகளில் கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. அதனைப் பெற்றுக்கொண்டதிலிருந்து தொடர்ச்சியாக ஜனநாயகத்தை பேணிவரும் நாடாகவும் இலங்கை மட்டுமே விளங்குகிறது” என்று தெரிவித்தாா்.

“2015 ஆம் ஆண்டில் நாம் புதிய அரசமைப்பு திருத்தத்தை சமர்ப்பித்தோம். நான் வழக்கமாக இத்தகைய பணிகளை கே.என்.சொக்ஸிக்கே வழங்குவேன். ஆனால் அப்போது அவர் உயிருடன் இல்லாத காரணத்தால் சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது” என்று தெரிவித்த ஜனாதிபதி, “அவருக்கு ஒரு வாக்கியத்தை நீக்க முடியவில்லை. அவ்வளவுதான் நடந்திருக்கிறது. அதற்காகத்தான் இந்தத் திருத்தம். எனவே, இது குறித்து பயப்பட வேண்டாம். நமது நாடு 1931 முதல் ஜனநாயகத்தைப் பாதுகாத்து வருகிறது” என்று தெரிவித்தாா்.