அரசியலமைப்பின்படி தோ்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் – குழப்ப வேண்டாம் என்கிறாா் பிரதமா்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், பாராளுமன்றத் தேர்தல், அதன் பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையில் மார்ட்டின் விக்கிரமசிங்க ஆவண கலைக்கூடத்தின் விசேட கலையரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று புதன்கிழமை பங்கேற்ற பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

”தேர்தல் தொடர்பான அரசின் நிலைப்பாடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்குள் அதற்கான தயார் நிலைபற்றியும் அறிவித்துள்ளனர். அதுபற்றி அரசாங்கமும் அறிவித்துள்ளது” என்றும் தினேஷ் குணவா்த்தன மேலும் தெரிவித்தாா்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமா், “தேர்தல் சட்டத்தினை மாற்றியமைக்க வேண்டுமானால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமான மூன்றில் இரண்டு பெரும்பான்மை முறைமை உள்ளது. அவ்வாறில்லாது, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பாராளுமன்றத்தை நடத்திச் செல்லலாம். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், பாராளுமன்றத் தேர்தல். பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தாா்.

“ஜனாதிபதித் தோ்தலுக்கு அழைப்பை விடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவிடமே உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் படி முன்கூட்டியே அழைப்பு விடுக்கவும் முடியாது. பிந்தி அழைக்கவும் முடியாது. இது அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி தேர்தலை நடத்தும்.

“சவால்களுக்கு மத்தியில் எமது பாராளுமன்றம் மிகவும் பொறுமையாக பயணிக்கின்றது. கருத்து வேறுபாடுகளும் உண்டு. அது இல்லாமல் இல்லை. பாராளுமன்றத்தினால் தொடர்ந்தும் இயங்க முடியாவிட்டால் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க முடியும். பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதியால் கலைக்க முடியும். இல்லையெனில், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் பாராளுமன்றத்தின் காலம் முடிவடையும்” என்றும் பிரதமா் தினேஷ் குணவா்த்தன சுட்டிக்காட்டினாா்.