அரசியலமைப்புக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளை கைவிட அரசாங்கத்திடம் கோரிக்கை

அரசியலமைப்பு நெருக்கடிக்கான சூழ்நிலையை உருவாக்கும் எந்தவொரு அல்லது அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொள்வதாக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் தனது அதிகாரங்களை பயன்படுத்துவதற்கும் கடமைகள் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால உத்தரவு தொடர்பில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் செயற்பாடுகள் தொடர்பில்  கருத்து வெளியிடும் போதே அது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இடைக்கால உத்தரவு தொடர்பில் அரசாங்கம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.ஜூலை 27ம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமர் உத்தியோகபூர்வ நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாக நிராகரிக்கும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்,இது இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியை நோக்கி செல்கின்றதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் ஆளுகை மற்றும் ஜனநாயகத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய இலங்கையின் பாதையில் பின்னடைவை ஏற்படுத்தும்.எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.