அரசியல் மற்றும் இராஜதந்திர பணிகள் சரியாக மாற்றீடு செய்யப்பட வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17 ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை(14) புலம்பெயர் தேசத்தில் இடம்பெற்ற நினைவு நிகழ்வில் போரியல் ஆய்வாளர் அருஸ் காணொளி மூலம் ஆற்றிய உரை.

bala அரசியல் மற்றும் இராஜதந்திர பணிகள் சரியாக மாற்றீடு செய்யப்பட வேண்டும் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 14 ஆவர் ஆண்டு நினைவுதினத்தை நாம் இன்று நினைவுகூர்வதற்கு ஒன்று கூடியுள்ளோம். எமது மக்களின் விடுதலைக்கான போரில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் 28 வருடங்கள் பயணித்த தேசத்தின் குரல் அவர்கள் பிரதம ஆலோசகராகவும், பொருமளவான பேச்சுவார்த்தைகளை தலமைதாங்கியவராகவும், மிகச்சிறந்த இராஜதந்திரரியாகவும் விளங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்போர் பல இராஜதந்திர நெருக்டிகளை சந்தித்தபோதெல்லாம் அதனை தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் கொள்கைகளுக்கு அமைவாக தமிழ் மக்களுக்கு சாதகமாக மாற்றியமைத்த பெருமைகள் தேசத்தின் குரல் பாலசிங்கம் அவர்களுக்கு உண்டு.

உதாரணமாக விடுதலைப்புலிகள் போரில் தான் நம்பிக்கை கொண்டவர்கள், பேச்சுக்களில் அல்ல என்று இந்தியா ஊடாக மேற்கொள்ளப்பட்ட போலியன பிரச்சாரங்களுக்கு தனது போரும் சமாதானமும் என்ற நூலில், தின்பு தொடக்கம் நோர்வேயின் அமைதி முயற்சி வரையிலும் எந்த பேச்சுக்களையும் விடுதலைப்புலிகள் புறந்தள்ளவில்லை என ஆதாரத்துடன் பதிவிட்டு சென்றவர் அவர்.

தமிழ் மக்களின் நலன் சார்ந்து விடுதலைப்புலிகள் எவ்வளவு தூரம் உண்மையாகவும், நியாயமாகவும் செயற்பட்டவர்கள் என்பதையும், இலங்கை, இந்திய அரசுகளும், மேற்குலகமும் எவ்வாறு நேர்மையற்று நடந்தார்கள் என்பதையும் அவர் தான் பெற்ற அனுபவங்கள் மூலம் எமக்கு எழுதிவைத்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இந்திய அரசு எமது மக்களை தனது நலன்களுக்கான பயன்படுத்த ஆரம்பித்தது எனவும் அது 1985 ஆம் ஆண்டு தின்பு பேச்சுக்களில் உச்சம் பெற்றது எனவும், 1987 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவை இராஜதந்திர வழியிலும், விடுதலைப்புலிகளை படைத்துறையாகவும் கையாள இந்தியா திட்டமிட்டதையும் அவர் தொளிவாக்கியுள்ளார். 1990 ஆம் ஆண்டு இந்தியாவால் ஏற்படவிருந்த மிகப்பெரும் ஆபத்தை அரசியல் – இராஜதந்திர வழிகளில் முறியடித்ததில் தேசத்தின் குரலின் பங்கு முக்கியமானது.

அதன் பின்னர் பிரேமதாசா காலத்தில் ஏற்பட்ட பேச்சுக்களின் போதும், அதற்கு பின்னர் சந்திரிக்கா குமாரணதுங்காவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின்போதும் எவ்வாறு இலங்கை அரசு தமிழ் மக்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சனையை கூட நிறைவேற்ற முன்வரவில்லை என்பதை அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

பேச்சுக்களை ஒருபுறம் நடத்திக்கொண்டு யாழ் குடாநாட்டை கைப்பற்ற சந்திரிக்கா திட்டமிட்டது ஒருபுறம் இருக்க, நோர்வேயின் சமாதான உடன்படிக்கையை இலங்கை அரசு எப்படி மீறியது என்பதையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். வொசிங்டனில் இடம்பெற்ற கொடைவழங்கும் நாடுகளின் கூட்டத்திற்கு விடுதலைப்புலிகளை கலந்துகொள்ளவிடாது அமெரிக்கா புறந்தள்ளியது என்பது தமிழ் மக்களுக்கு அனைத்துலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கவிடாது செய்வதற்கான திட்டமிட்ட செயல் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தாh.

bala uk3 அரசியல் மற்றும் இராஜதந்திர பணிகள் சரியாக மாற்றீடு செய்யப்பட வேண்டும் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்அது மட்டுமல்லாது ஆக்கிரமித்த காணிகளை விடுவித்து படையினரின் பிரசன்னத்தை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான முயற்சிகளைக் கூட விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டாலே சாத்தியமாகும் என இலங்கை அரசு தெரிவித்ததாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அன்று விடுதலப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டாலும் இலங்கை அரசின்; ஆக்கிரமிப்புக்கள் குறைந்துவிடாது, மேலும் அதிகரித்திருக்கும் என்பதை தான் 2009 ஆம் ஆண்டு ஆயுத மௌனிப்பின் பின்பும் இடம்பெறும் சம்பவங்கள் எமக்கு காண்பிக்கின்றன.

இலங்கையை பங்கு பிரிப்பதற்காக போட்டி போட்டுக்கொண்டு தமிழ் மக்களின் நடைமுறை அரசை அழித்த இந்தியாவும், அமெரிக்கா தலைமையிலான கூட்டணியினரும் இன்று தமது செயலுக்காக வருந்துவார்கள் என்பதை நாம் அறிவோம்.

1990 களில் இலங்கையில் இருந்து இந்திய படையின் வெளியேற்றமும், 2023 ஆம் ஆண்டு மாலைதீவில் இருந்து இந்திய படையினரின் வெளியேற்றமும் இந்தியா சந்தித்த இருபெரும் இரஜதந்திர தோல்விகள்.

உக்ரைனிலும், பாலஸ்தீனத்திலும் சிக்கியுள்ள மேற்குலகம் தனது உலக வல்லாதிக்கத்தை இழந்து வருகின்றது. தமிழீழத்தில் இனப்படுகொலையை அனுமதித்த ஐ.நா இன்று காசாவில் தனது முழு நம்பிக்கையையும் இழந்து நிற்கின்றது. ஐ.நாவிற்கு மாற்றீடாக ஒரு அமைப்பை உருவாக்கும் பேச்சுக்களும் எழாமலில்லை.

ஈழத்தமிழர்களை இனி தனது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்த முடியாது என அறிந்த இந்தியா இப்போது அவர்களை கைவிட்டு மலையகம் நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது.

ஆனால் மியான்மார் ஊடாக சீனா அமைக்கின்ற வர்த்தக பாதையில் இலங்கை இணையும் என்பதை இலங்கை அதிபர் எந்த தயக்கமுமின்றி தெரிவித்துவிட்டார். இந்தியாவின் பாதுகாப்பில் தான் இலங்கையின் பாதுகாப்பு தங்கியுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதுவர் பாக்லே விடுத்த மிரட்டலும் இலங்கையை ஒன்றும் செய்யவில்லை.

ஆமெரிக்கா பிரித்தானியா தலைமையிலான 39 நாடுகளின் கடற்படை கூட்டணியில் இலங்கை இணைந்தாலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்கின்றது மேற்குலகம்.

நடக்கும் சம்பவங்களையும், உலக அரசியலையும் ஒப்புநோக்கிப் பார்த்தால் எமக்கான முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும். ஆனால் அதனை நாம் சரியாக கையாள்கிறோமோ இல்லையா என்பது தான் தற்போதைய கேள்வி. அதாவது இந்த உலக மாற்றத்தை சரியாக உள்வாங்கி எமக்கான வழிகாட்டியாக எமது தேசத்தின் குரல் எம்முடன் இல்லை என்பதை மிகுந்த வேதனையுடன் நாம் இப்போது உணர்கின்றோம்.

ஒவ்வொரு வருடமும் எமது தேசியத்தலைவர் ஆற்றிய மாவீரர்நாள் உரை என்பது மாவீரர்களை நினைவுகூரும் உரை மட்டுமல்ல, அந்த வருடம் இடம்பெற்ற அரசியல், இரஜதந்திர மற்றும் படைத்துறை நகர்வுகள், அதில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட சவால்கள், அவற்றை முறியடித்து விடுதலைப்பயணத்தை முன்னோக்கி நகர்த்த விடுதலைப்புலிகளின் ஆற்றிய பணிகள், அவர்களின் உத்திகள், எதிர்கால நகர்வுகள், எதிர்கால செயற்பாடுகளுக்கான ஆயத்தங்கள், உலக அரசியல் மற்றும் இரஜதந்திர நகர்வுகள் என்று எல்லாம் அந்த உரையில் இருக்கும்.

அதனை தேசியத்தலைவருடன் இணைந்து வடிவமைப்பதிலும், தேசியத்தலைவரின் உரைக்கு பின்னர் அதற்கான மேலதிக விளக்கங்களுடன் தமிழ் மக்களுக்கான தெளிவான அரசியல் மற்றும் இரஜதந்திர புரிதலை ஏற்படுத்துவதிலும் தேசத்தின் குரல் ஆற்றிய பணி மகத்தானது.

அவர் ஆற்றிய அந்த அரசியல் மற்றும் இராஜதந்திர பணிகள் இன்று சரியாக மாற்றீடு செய்யப்படாது வெற்றிடமாக உள்ளதாக நாம் உணர்கின்றோம். அந்த வெற்றிடத்தை நிரப்பி எமது விடுதலைப்போரை முன்நகர்த்த எல்லோரும் சேர்ந்து முயற்சிப்போமானால் அதுவோ நாம் அவருக்கு செய்யும் மகத்தான அஞ்சலியாகும்.