அவசரப்பட்டு தம்மிக்கவை வேட்பாளராக அறிவிக்க வேண்டாம்! ராஜபக்ஷக்களிடம் ரணில் கோரினாரா?

Ranil mahinda அவசரப்பட்டு தம்மிக்கவை வேட்பாளராக அறிவிக்க வேண்டாம்! ராஜபக்ஷக்களிடம் ரணில் கோரினாரா?எதிர்வரும் 27ஆம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்டுவரவிருப்பதாகவும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேராவை அறிவிக்க வேண்டாம் என்றும் ராஜபக்சக்களிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவகாசம் பெற்றுள்ளதாக எதிரணியின் சுயாதீன உறுப்பினருமான சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை கடந்த 2 ஆம் திகதி அறிவிக்க ராஜபக்சக்கள் தீர்மானித்திருந்தனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் கால்களில் விழுந்து மன்றாடி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தாா்.

“எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களில் 15 பேரை அரசாங்கத்தின் பக்கம் கொண்டு வந்து விடுவேன் எனக்கூறிக் கால அவகாசம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார். அத்துடன் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கும் பட்சத்தில் தான் பிரதமர் வேட்பாளராக அவரது அரசாங்கத்தில் போட்டியிடுவதாகவும் ஜனாதிபதி ராஜபக்சக்களிடம் குறிப்பிட்டுள்ளார்” என்றும் அவா் தெரிவித்தாா்.