அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் ரணில் பிரதான உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார். அவர் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதான உரை நிகழ்த்தவுள்ளார். ஏழாவது இந்து சமுத்திர மாநாடு நாளையும் நாளை மறுதினமும் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.

இந்து சமுத்திரத்தை அண்மித்த நாடுகள் மற்றும் இந்து சமுத்திரத்தை அதிகமாக பயன்படுத்தும் ஏனைய நாடுகளை பாதிக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்படுகின்றது.

2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநாடு இம்முறை, “நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் நடைபெறுகின்றது.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 40 நாடுகளை சேர்ந்தவர்களின் பங்கேற்புடன் வரைபடமொன்று தயாரிக்கும் நடவடிக்கையும் இம்முறை மாநாட்டில் முன்னெடுக்கப்படவுள்ளது.