ஆகஸ்ட்டில் பொதுத் தோ்தலையும் செப்ரெம்பரில் ஜனாதிபதித் தோ்தலையும் நடத்தலாம் – முன்னாள் ஆணையாளா் கருத்து

ஜனாதிபதி நினைத்தால் ஆகஸ்ட்டில் பொதுத் தேர்தலையும் செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தெதாடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ’15ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைத்தால் பொதுத் தேர்தலை நடத்துவது சிக்கலானது என்று சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலை
நடத்துவதற்கான அதிகாரம் ஜுலை 17ஆம் திகதிக்கு பின்னரே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கின்றது.

இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அதற்கான தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது 52 நாட்கள் அவசியாகும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் 17ஆம் திகதிக்கு பின்னர் நடத்தலாம் என்றால் ஆகஸ்ட் மாதத்தில் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியும். ஆனால் ஜனாதிபதி விரும்பினாலே குறித்த காலத்தில் அந்தத் தேர்தலை நடத்தலாம். அவரிடமே பாரளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளது” என்றும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தாா்.