இந்தியா: மோடியின் பாதுகாப்புக்கு 506.32 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழகம் புறக்கணிப்பு

இந்தியாவின் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு – செலவு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு நாடாளுமன்றில் தாக்கல் செய்தார். இதில்  பிரதமர் மோடியை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு 506.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டனங்களும் எழுந்துள்ளது.

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு – செலவு திட்டத்தில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை, தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மத்திய நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த  வரவு – செலவு திட்ட உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறாத நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த வரவு –  செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன. இந்த கோரிக்கைக்கு இணங்க ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆந்திராவுக்கு ரூ. 15,000 கோடியும், பீகாரின் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு ரூ. 26,000 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

கண்டனம்

இந்நிலையில், மத்திய நிதியமையச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும். இம்முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகளும், அதனைச் சார்ந்த தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.