இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் – பாராளுமன்றத்தை முற்றுகையிடப்போவதாக எச்சரிக்கை

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடுவோம் என்றனர்.

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இது தொடர்பில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் சிறீ கந்தவேல் புனித பிரகாஸ் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாடு எமது கடற்பகுதிகளில் அரங்கேறி வருகிறது. இதனால் எமது கடற்றொழிலாளர்கள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில், நாளை காலை 10 மணிக்கு இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர், துறைசார்ந்த திணைக்களங்கள் விரைந்து செயற்பட்டு இந்திய இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் பாராளுமன்றத்தை முற்றுகையிட தமது அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.