இனப்படுகொலை குற்றச்சாட்டை முன்வைக்க தயாராகும் கனடா? – எச்சரிக்கையுடன் கொழும்பு

தமிழ் இனப் படுகொலை நினைவுச் சின்னமொன்றை கனடாவிலுள்ள நகர சபையொன்று நிர்மாணிப்பதற்கான முயற்சிகளை முறியடிப்பதற்கும் அந்நாட்டு அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதற்குமான விடயத்தில் இலங்கை இன்னும் தோல்வியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகர சபையானது தமிழ் இனப் படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.வெளிநாட்டு ஊடகத்தின் பிரகாரம் , இந்த நினைவு சின்னத்தை அமைப்பதற்கு நக ரசபை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்திருந்தது.

இது இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக பிரமாலியா பகுதியில் உள்ள சிங்குகுசி பூங்காவில் 4.8 மீற்றர் உயரத்தில் அமைக்கப்படும் துருப்பிடிக்காத எகு நினைவுச் சின்னமாகும். இதனை, ஒரு இனப்படுகொலை என்று தமிழ் சமூகத்தில் உள்ள பலர் அழைக்கிறார்கள்.

2022 ஆம் ஆண்டு மே 18 ஆம்திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுட்டிப்பதற்கு கனடா பாராளுமன்றம் ஏகமனதாக வாக்களித்திருந்தது.

இதேவேளை இலங்கை அடுத்தமாதம் யுத்த வெற்றித் தினத்தை கொண்டாடும்போது கனேடியத் தலைவர்கள் இனப்படு கொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் என்பதால், இலங்கை மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர ரீதியில் மோதலைத் தூண்டியது. இதற்கு இலங்கை கனேடிய தூதுவரை அழைத்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. முன்னர் இலங்கை எதிர்ப்பை தெரிவித்திருந்தநிலையில், இம்முறையும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் மீண்டும் இடம்பெறுமா என்பதை உறுதிப்படுத்த கொழும்பு ஆர்வமாக உள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரம் தெரிவித்ததாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.

“போரின் போது இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்கள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என்று கனேடிய சமஷ்டி அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், கனேடிய தலைவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்த வரலாற்றைக் கொண்டுள்ளனர்’ என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அதேவேளை, நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான பிராம்ப்டன் நகர சபையின் முயற்சிகளை இலங்கையால் முறியடிக்க முடியவில்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை கனேடிய சமஷ்டி அரசாங்கம்நிராகரித்த போதிலும், நகர சபைமீதான அதிகார வரம்பைக் கொண்டிருக்கவில்லையாதலால் இந்த நடவடிக்கையை நிறுத்துவது இலங்கைக்கு கடினமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.