இராணுவத்தினா் ரஷ்ய போர்க்களத்தில் இறக்க வேண்டிய நிலைக்கு அரசே பொறுப்பு – சஜித் பிரேதாஸ குற்றச்சாட்டு

sajith இராணுவத்தினா் ரஷ்ய போர்க்களத்தில் இறக்க வேண்டிய நிலைக்கு அரசே பொறுப்பு - சஜித் பிரேதாஸ குற்றச்சாட்டு30 வருடங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட எமது நாட்டைப் பாதுகாத்த இராணுவ வீரர்களை அன்புடன் நினைவுகூருகின்றோம். இந்த யுத்த வெற்றியின் பின்னர் அன்பிற்குரிய இராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் உரிய கடமைகளை நிறைவேற்றியுள்ளதா என்பதை மீண்டுமொருமுறை சிந்தித்து பார்க்க வேண்டும். இன்று இராணுவ வீரர்களும் அவர்களது குடும்பங்களும் ஆதரவற்றவர்களாகவும், தாங்க முடியாத பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தாா்.

“நாட்டிற்காக உடல் உறுப்புகள் என உயிர்களை தியாகம் செய்த இராணுவ வீரர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காது போனமையினால் இராணுவ வீரர்களது குடும்பங்கள் வறுமையின் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அதிக வருமானத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்று வேறு வழிகளைத் தேடி அநாதரவாகியுள்ளனர்.

சிலர் சாதாரண வேலைகளைத் தேடி ரஷ்யாவுக்குச் சென்றாலும், அவர்கள் போர் முனைக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால் பெருமளவிலான இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். இந்த இராணுவ வீரர்களுக்கான கடமைகளை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றாமையே இந்த மரணங்களுக்குக் காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டைக் காப்பாற்றிய இராணுவ வீரர்கள் நாட்டில் வாழ முடியாது, வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகைகள் கூட இடைநிறுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் அவர்களைப் பாதுகாப்பது நம்மனைவரினதும் பொறுப்பாகும். இந்தச் சலுகைகள் அனைத்தையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.