இரு நாட்டு மீனவா் பிரச்சினை – புதுடில்லி வருமாறு டக்ளஸூக்கு இந்தியா அழைப்பு

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டபோது, இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடு காரணமாக பாதிக்கப்படும் தங்களுடைய வாழ்வாதாரம் தொடர்பாக போதிய கரிசனை வெளிப்படுத்தப்படுவதில்லை என்ற ஆதங்கத்தினை வெளிப்படுத்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த போது கூட தமிழ் மக்களின் பிரதிநிதிகளினால் கடற்றொழிலாளர் விவகாரம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே தனக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் கடற்றொழிலாளர் விவகாரம் விரிவாக பேசப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புதுடில்லி வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.