இரு வார இடைவெளியில் இரண்டு தோ்தல்களையும் நடத்த முடியும் – தோ்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவா்

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் 14 நாட்கள் இடைவெளியில் நடத்த முடியும் என்றும் இதன்படி ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமாக இருந்தால் செப்டம்பரில் பொதுத் தேர்தலை நடத்த முடியாது
என்று இல்லை என்றும் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தற்போதைய நிலைமையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தோ்தலுக்கான தினத்தை ஜுலை மாதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்க முடியும். இதன்படி செப்டம்பர் 17 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அத்துடன் அதற்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்தவும் முடியும்.

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு குறைந்தது 52 நாட்கள் போதுமானது. அதாவது கலைக்கப்பட்ட நாளில் இருந்து 8 வாரங்கள் போதுமானது. ஆகஸ்ட் 15 அல்லது 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தினாலும் அதற்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 14 நாட்கள் போதுமானது. வேண்டுமென்றால் ஜனாதிபதித் தேர்தலை ஒக்டோபர் 10ஆம் திகதிவரையில் கொண்டு செல்ல முடியும்.

அப்படிச் செய்தால் செப்டம்பரில் பொதுத் தேர்தலை நடத்தவும் முடியும். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுபவம் உள்ளது. இதன்படி இரண்டு தேர்தல்களையும் 14 நாட்கள் இடைவெளியில் நடத்தலாம். இப்படித் தேர்தலை நடத்த முடியும் என்பது ஜனாதிபதிக்கும் தெரியும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தெரியும். தேர்தலை நடத்த வேண்டுமாயின் மே 15 அல்லது ஜுன் 15 பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று கூறுவதில் உண்மையில்லை.

எப்போது வேண்டுமென்றாலும் பாராளுமன்றத்தை கலைக்கலாம். இதேவேளை எப்போது தேர்தலை நடத்த வேண்டுமென்பது ஜனாதிபதியின் கையிலேயே இருக்கின்றது. 14 நாட்கள் இடைவெளியில் இரண்டு தேர்தல்களையும் நடத்தலாம். அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடந்து 14 நாட்களிலோ அல்லது ஜே.ஆர். ஜயவர்தன செய்ததை போன்று ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் அன்றையத் தினம் இரவே பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியும். எப்படியும் புதிய ஜனாதிபதி,ஜனாதிபதியாக பதவியேற்ற அன்றைய தினமே பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியும். இதனால் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது” என்றார்.