இலங்கையில் இந்த வருடத்தில் 238 யானைகள் மரணம்

இலங்கையில் விபத்துக்கள் மற்றும் மனிதர்களின் தாக்குதல்களால் இறக்கும் யானைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த வருடத்தில் 100 இற்கு மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டு;ளளதாக இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளபோதும், கடந்த ஜுலை மாதம் வரையிலும் 238 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 36 மணிநேரத்தில் 11 யானைகள் கொல்லப்பட்டிருந்தன. கடந்த மாதம் 27 ஆம் நாள் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற  தொடரூந்து மோதியதால் 4 யானைகள் கொல்லப்பட்டன, அதன் பின்னர் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடரூந்து மோதியதால் 2 யானைகள் கொல்லப்பட்டன.

அதேசமயம் இந்த வருடத்தில் 67 யானைகள் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், சட்டவிரோதமான மின்சார கம்பிகளில் சிக்கி மற்றும் பொறிகளில் சிக்கி உயிரிழந்துள்ளன. பல யானைகள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதிகளவான யானைகள் அனுராதபுரத்தில் கொல்லப்பட்டுள்ளன. இந்தவருடம் ஏப்பிரல் மாதம் வரையிலும் 34 யானைகள் அங்கு கொல்லப்பட்டுள்ளன.

எனினும் இந்த விபத்துக்களை தடுத்து யானைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை.