இளம்வயதினர் புகைப்பிடிப்பதை முற்றாக நிறுத்த பிரித்தானியா தீட்டம்

படிப்படியான திட்டங்களின் ஊடாக இளம்வயதினர் புகைப்பிடிப்பதை எதிர்வரும் 2040 ஆம் ஆண்டு முற்றாக நிறுத்துவதற்கு பிரித்தானியா அரசு திட்டமிட்டுள்ளது.

புகைப்படிப்பதற்கான அனுமதிக்கப்பட்ட வயது எல்லையை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயதினால் அதிகரிப்பது என பிரித்தானியா பிரதமர் ரிசி சுனாக் தனது புதிய திட்டத்தில் கடந்த புதன்கிழமை (4) அறிவித்துள்ளார். இந்த திட்டம் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் நாளுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கு சிகரட்டுக்களை விற்பனை செய்வது அங்கு தற்போது சட்டவிரோதமானது. ஆனால் இந்த வயது எல்லை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கப்படவுள்ளது. புகைத்தல் அற்ற இளம்சமுதாயத்தை உருவாக்கப்போவதாகவும் அதன் மூலம் பல இளம்வயதினரின் உயிர்களை காப்பாற்ற போவதாகவும் சுனாக் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் புகைத்தலால் ஆண்டுதோறும் 64,000 பேர் இறக்கின்றனர். புற்றுநோயாளிகளில் நான்கில் ஒருவர் புகைப்பிடிப்பவராகவே இருக்கின்றார்கள். நோயாளிகளை பராமரிப்பதற்கு பல மில்லியன் பவுண்ஸ்களும் செலவிடப்படுவதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.