ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றே கூறினேன் – கர்தினால்

எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்குமாறு என்றுமே தான் கூறியதில்லை எனவும், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுக்காதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றே தான் கேட்டுக் கொண்டுள்ளதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை விசாரித்து உண்மைகளை வெளிப்படுத்துவதுடன் அதற்கான திட்டங்களையும் முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சியினர் இது விடயமாக நம்மிடம் உறுதி மொழிகளையும் வழங்கியுள்ளனர் என்றே நான் குறிப்பிட்டிருந்தேன்.

அவர்கள் மட்டுமல்ல ஏனைய அரசியல் கட்சிகளும் அவ்வாறே செயற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈஸ்டர் தாக்குதல் குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்துமாறு அன்று
முதல் இன்று வரை அனைத்து அரசியல் தரப்புகளையும் நாங்கள் கேட்டு வந்துள்ளோம். எனவே, அத்தகைய தீர்வை வழங்கும் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க இந்த நாட்டின் அனைத்து மக்களையும் ஊக்குவிக்க நான் விரும்புகிறேன்.

அதேபோன்று, சில எம்.பி.க்கள் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தில் அடிப்படையற்ற வகையில் நடந்து கொண்டுள்ளனர். இது வருந்தத்தக்கது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பின்றி தங்களுக்கு ஏற்றாற் போல் வாய்க்கு வந்தபடி குற்றம் சாட்டுவது உண்மைக்கும் நீதிக்கும் எதிரான பாவம் என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டால் அது மிகவும் நல்லதே” என்றும் பேராயா் தெரிவித்தாா்.