உக்ரைனுடனான போருக்குச் சென்ற இலங்கையா்கள் பலா் ரஷ்யப் பிரஜைகளாகியுள்ளனா் – அமைச்சா் அலி சப்ரி

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் பலா் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுதருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்துள்ளன என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ரஷ்யப் பிரஜைகளாக மாறியுள்ளனர் ரஷ்ய குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

“இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக்கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்துவிடுவீர்கள். நீங்கள் இலங்கை பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களிற்கு உரிமையில்லை” என்றும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

“சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது. முகாம்களில் உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக சேர்க்கப்படுவதாக தெரிவித்து அவர்களை போருக்குள் சிக்கவைத்துள்ளனர்” என அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏனையவர்கள் தெரிந்தே இணைந்துகொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.