உணர்வுபூர்வமாக ஒன்றிணையுங்கள் – தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு

May 18 Vakeesam உணர்வுபூர்வமாக ஒன்றிணையுங்கள் - தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்புமே 18 இனஅழிப்பு நினைவுநாளில் அனைத்து தமிழ் உறவுகளையும் உணர்வுபூர்வமாக ஒன்றிணையுமாறு தமிழ்ச் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்புவிடுத்துள்ளது.

இது தொடா்பாக அவா்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –

எல்லா நினைவேந்தல்களும் தமிழ் மக்களை ஓருணர்ச்சிப் புள்ளியில் குவிக்கின்றன. அவை தாயகத்தில் மட்டுமல்ல உலகப் பரப்பெங்கும் தமிழ் மக்களை ஓருணர்ச்சிப் புள்ளியில் குவிக்கின்றன. வடக்குக் கிழக்காய் சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தை அவை உணர்வு பூர்வமாகப் பிணைக்கவல்லன.

அதனால்தான் கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கும் பரிமாறுவதற்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டிலிருந்து கிழக்கில் நினைவேந்தலுக்கு எதிராக நெருக்கடிகள் அதிகரித்து வருவது தற்செயலானது அல்ல. வடக்கும் கிழக்கும் உணர்வுபூர்வமாக இணைவதை, தமிழர்களின் தாயகம் ஓருணர்ச்சிப் புள்ளியில் ஒன்றிணைவதைத் தடுக்க விரும்பும் சக்திகள் கிழக்கில் நினைவேந்தலைத் தடுக்கின்றன.

இந்த அடிப்படையில் திருகோணமலை சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகிய எமது உறவுகளோடு தமிழ் சிவில் சமூகங்களின் கூட்டிணைவு தன் தோழமையை உறுதிப்படுத்துகின்றது. அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிக்கின்றது. ஜனாதிபதி தற்போது முனைப்புக் காட்டும் உண்மை மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை ஏன் நம்ப முடியாது என்பதற்கு மேற்படி கைது நடவடிக்கைகள் போதிய சான்றுகள் ஆகும்.

நினைவேந்தலை ஆகக் கூடிய மட்டும் பரவலாக்குவதும் தொடர்ச்சியானது ஆக்குவதும்தான் இத்தருணத்தில் தமிழ் மக்கள் செய்ய வேண்டியவை. கிழக்கில் ஒரு ஊரில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தடுத்தால் ஏனைய எல்லா ஊர்களிலும் அதை பரவலாக்க வேண்டும். வரும் 18 ஆம் திகதி நமது சிவில் சமூக கூட்டிணைவில் வரும் அனைத்து சிவில் சமூகங்களும் தத்தமது எல்லைகளுக்கு உட்பட்டு தத்தமது பிரதேசங்களில் நினைவேந்தலை அனுஷ்டிக்குமாறும் நினைவேந்தும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு கொடுக்குமாறும் வேண்டுகிறோம்.

மே 18, தமிழ் மக்களை ஓர் உணர்ச்சிப் புள்ளியில் இணைக்கின்றது. அது தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உணர்வு பூர்வமாகப் பாதுகாக்கின்றது.

அவ்வாறு தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகம் உறுதிப்படுத்தும் விதத்தில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நமது சிவில் சமூகங்களின் கூட்டிணைவு முன்வைக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் உணர்வு பூர்வமாகத் திரளும் தமிழர்கள் அல்லது முள்ளிவாய்க்காலை நோக்கி உணர்வுபூர்வமாக பிணைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள், அதேபோல வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து தமிழ் மக்களின் தேசியத் திரட்ச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவில் சமூகங்களின் கூட்டிணைவு அழைப்பு விடுக்கின்றது.

இந்த அறிக்கையில் கையொப்பமிடுவோர்

வணக்கத்துக்குரிய ஆயர் நோயல் இமானுவேல் – திருகோணமலை மறைமாவட்டம்
தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கைலை ஆதீனம் – திருகோணமலை

தவத்திரு வேலன் சுவாமிகள் சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம்

பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம் தலைவர் அரசறிவியல்துறை யாழ் பல்கலைக்கழகம்

கலாநிதி. க.சிதம்பரநாதன், அரங்க செயற்பாட்டு குழு

அருட்பணி த.ஜீவராஜ் இயேசு சபை சமூக செயற்பாட்டாளர் – மட்டக்களப்பு

திரு.நிலாந்தன் – அரசியல் ஆய்வாளர்

திரு.ஜோதிலிங்கம் – சமூக விஞ்ஞான ஆய்வு மையம்

அருட்பணி பி.ஞானராஜ் (நேரு) மனித உரிமை செயற்பாட்டாளர் – மன்னார்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம்

நீதி சமாதான ஆணைக்குழு யாழ் மறை மாவட்டம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரழுச்சி இயக்கம்

தமிழ் சிவில் சமூக அமையம்

மக்கள் மனு வடக்கு கிழக்கு சிவில் சமூக குழு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம்

அறிவார் சமூகம் திருகோணமலை

அகில இலங்கை மீனவர் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கூட்டமைப்பு

கரைச்சி வடக்கு சமாசம்

சிவில் அமைப்பு மட்டக்களப்பு

தமிழ் ஊடகத் திரட்டு

மாவட்ட கமக்காரர் அமைப்பு வவுனியா

தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்

தமிழர் கலை பண்பாட்டு மையம்

எம்பவர் நிறுவனம்

குரலற்றவர்களின் குரல்

மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர் அமைப்பு

சமூக மாற்றத்துக்கான அமைப்பு வவுனியா

தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இணையம் திருகோணமலை

புழுதி சமூக உரிமைகளுக்கான அமைப்பு திருகோணமலை

நலிவுற்ற சமூகங்களின் அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு திருகோணமல

யாழ் ஊடக அமையம்

வடமாகாண கடலோடிகள் சங்கம்

வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்

தமிழ் செயற்பாட்டாளர்கள் இணையம் – திருகோணமலை.