உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் – துரைசாமி நடராஜா

05 உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் - துரைசாமி நடராஜாஇலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை நிலை அதிகரித்து வருவதாக அறிக்கைகள் வலியுறுத்துகின்றன. அதிலும் பெருந்தோட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைந்துள்ள நிலையில் இது எதிர்காலத்தில் பாதக விளைவுகள் பலவற்றுக்கும் உந்துசக்தியாக அமையுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கடி, விலைவாசி அதிகரிப்பு, வருமானப் பற்றாக்குறை உள்ளிட்ட பல நிலைமைகள் நாட்டு மக்களின் வறுமை நிலையை அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலித்துள்ள நிலையில் உணவுத் தேவையையும் நிறைவேற்ற முடியாத நிலையில் பலர் அல்லல்படுவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. யுனிசெப் அமைப்பின் அண்மைய அறிக்கையின்படி 2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட 5.7 மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக தெரியவருகின்றது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 15.7 சதவீதமானோர் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் குடும்பங்கள் பட்டினியால் வாடுவதால், குழந்தைகள் கடுமையான வளர்ச்சி குன்றிய நிலை மற்றும் மரணத்தை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊட்டச்சத்துக் குறைபாடு தற்போது தெற்காசியாவில் இரண்டாவது கடுமையானதாகவும், உலகில் பத்தாவது கடுமையானதாகவும் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் நீங்கள் அறிந்ததேயாகும்.

விவசாயம் பாதிப்பு 

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்களால் கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் குடும்பங்கள் மத்தியில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 3.9 மில்லியன் மக்கள் ஓரளவு உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கும், சுமார் ஒரு இலட்சம் மக்கள் தீவிர உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்திருப்பதாக ஆய்வு குறிப்பிடுகின்றது. 56 வீதமான குடும்பங்கள் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறுபட்ட மாற்று வழிகளை கையாளும் நிலையில் கடந்த 2022 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த முன்னேற்றமே அடையப்பட்டிருந்தது.

06 1 உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் - துரைசாமி நடராஜாபொருளாதார நெருக்கடிக்கடியின் விளைவாக அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக 0.25 தொடக்கம் 2 ஹெக்டேயர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளும் குறுநில விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிப்படைந்திருப்பதாகவும் ஆய்வு மேலும் வலியுறுத்துகின்றது. அத்தோடு இவ்வாண்டில் 1.16 மில்லியன் தொன் கோதுமை, 130,000 தொன் சோளம், 465,000 தொன் அரிசி மற்றும் 200,000 தொன் உருளைக்கிழங்கு என்பன உள்ளடங்கலாக மொத்தமாக 1.8 மில்லியன் தொன் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் மே மாதம் மேற்கொள்ளப்பட பிறிதொரு மதிப்பீட்டின்படி உணவுப் பாதுகாப்பின்மை நிலை மிகவும் உயர்வாக காணப்படும் பிரதேசங்களில் பெருந்தோட்டப்பகுதி (42 சதவீதம்) முதலிடத்திலும், வடமாகாணம் (28 சதவீதம்) இரண்டாம் இடத்திலும், கிழக்கு மாகாணம் (23 சதவீதம்) மூன்றாமிடத்திலும காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரிச் சுமை மக்களின் மீது சுமத்தப்பட்டதால் கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசார் மற்றும் புள்ளி விபரத்திணைக்கள அண்மைய அறிக்கை வலியுறுத்தியது. 2019 ம் ஆண்டு காலப்பகுதியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்த இந்த வறிய மக்கள் முழு சனத்தொகையில் 25 இலட்சமாக பதிவாகியிருந்தபோதும் வறிய மக்கள் பிரிவுக்கு புதிதாக 30 இலட்சம் பேர் இணைந்திருந்தனர்.

07 1 உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் - துரைசாமி நடராஜாநாட்டின் மொத்த சனத்தொகையில் 2019 ஆகும்போது நூற்றுக்கு 11.9 வீதமானவர்களே வறுமை நிலையில் இருப்பதாக பதிவாகியிருந்தபோதும் அண்மைக்காலமாக அது 25 சதவீதமாகியுள்ளது. இதனடிப்படையில் வறுமை நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. வற்வரி வீதத்தை அதிகரிப்பதற்கு முன்னர் இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் நூற்றுக்கு 27.9 வீதமானவர்கள் 2024 ம் ஆண்டாகும்போது வறுமை நிலைக்கு ஆளாவர் என்பது உலக வங்கியின் கணிப்பாக இருந்தது.

வறுமை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக பேசுகின்றபோது இந்த விடயங்களில் மலையக மக்களின் நிலைமை இரட்டிப்பாகியுள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்.கடந்தகால மற்றும் சமகால ஆய்வுகள் பலவும் இதனை வெளிப்படுத்துவதாகவுள்ளன. 1976 ம் ஆண்டு நிகழ்ந்த ‘இலங்கை போஷாக்கு அளவீடு’ வெளியிட்ட தகவலின்படி கிராமியச் சிறுவர்களைக் காட்டிலும் தோட்டப்புறச் சிறுவர்களே பெருமளவு நீடித்த போஷாக்கின்மையாலும், குறை போஷாக்கினாலும் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

தோட்டப் பகுதிகளில் கலோரியளவில் உணவு நுகர்ச்சி சராசரிக்கு மேலாக இருப்பினும், புரத, உயிர்ச்சத்துக்கள் நிறைந்த உணவு நுகர்ச்சி மிகமிகக் குறைவாக இருப்பதனால் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதேவேளை 1979 ம் ஆண்டு நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் 1975 ம் ஆண்டிலிருந்து தோட்டப்புற மக்களின் சுகாதார நிலைமைகளில் படிப்படியாக மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒதுக்கப்பட்ட சமூகம் 

ஆரம்ப காலந்தொட்டே பெருந்தோட்டத் தமிழ் மக்கள் போதுமான வருமானமின்மை, தமது தனிமனித இயலுமைகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பின்மை, மனித உரிமைகள் மறுக்கப்படுதல், தனிமைப்படுத்தப்படுதலும் ஒதுக்கி வைக்கப்படுதலும் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்தனர். பெருந்தோட்டங்களோடு அவர்களைப் பிணைக்கும் வதிவிடம் மற்றும் மானிய முறையானது அவர்களிடையே தாம் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

08 1 உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் - துரைசாமி நடராஜாஏனைய துறைகளைச் சேர்ந்த மக்களோடு ஒப்பீட்டு ரீதியில் நோக்குகையில் இலங்கையின் பெருந்தோட்ட மக்களே ஆகக்கூடிய வறுமை நிலையில் வாழுகின்றனர் என்பதை புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. உலக வங்கியின் ஆய்வொன்று நாட்டில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலேயே மக்கள் வறுமையின் உச்சப்பிடியில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கின்றது. தோட்ட மக்களின் வறுமை நிலையானது வருமானம் சார்ந்த ஒரு வறுமையாக மட்டுமன்றி, தமது மனித அபிவிருத்தியை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால் ஏற்படும் ஒரு வறுமையாகவும் உள்ளது என்று பேராசிரியர் எம்.சின்னத்தம்பி கூறியுள்ளதும் இங்கு நோக்கத்தக்கதாகும்.

இதேவேளை இலங்கையில் வறுமையை ஏற்படுத்தும் காரணிகள் குறித்தும் பேராசிரியர் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டுகின்றார். இதனடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார உட்கட்டமைப்புக்களில் காணப்படும் குறைபாடுகள், அவற்றின் போதாத தன்மை, போதிய வேலைவாய்ப்புகள் இல்லாமை, சமூகத்தின் பல்வேறு குழுவினர்கள் பொதுச் சேவைகளின் நன்மையை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளமை, தரங்குன்றிய கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை சேவைகள் என்பன காணப்படுதல் போன்ற பல விடயங்கள் வறுமை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்துவதாக பேராசிரியர் சின்னத்தம்பி தெரிவிக்கின்றார்.

09 3 உணவுப் பாதுகாப்பின்மையும் பெருந்தோட்ட மக்களும் - துரைசாமி நடராஜாமேலும் பெருந்தோட்டத் தொழிலாளர், பொதுவசதிகள் குறைவாகவுள்ள எல்லைப்புறக் கிராமங்களில் வாழும் மக்கள், போரினால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும், அகதிமுகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ளோர் போன்றோர் பொதுச்சேவைகளின் நன்மையினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ள நிலையில் இதனால் இவர்களிடையே அதிகரித்த வறுமை நிலை காணப்படுகின்றது. அத்தோடு நாட்டில் ஏனைய துறைகளிலும் பார்க்க தோட்டப்புறங்களிலேயே  வசதிகள் குறைவாகவும், தரங்குன்றியனவாகவும் உள்ளன.

எனவே தோட்டப்புற மக்களே இதனால் ஆகக்கூடிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடையே உயர்ந்த வறுமை நிலை காணப்படுவதற்கு இவை கணிசமாக பங்களிக்கின்றன என்பதே உண்மையாகும்.நாட்டின் வறுமை நிலையைக் குறைப்பதில் அரசாங்கத்தின் பொதுநலச் சேவைகளும், சமூகநலன் திட்டங்களும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பல்வேறு காரணங்களால் தோட்டப்புற மக்கள் இவற்றின் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாததனாலேயே அவர்களிடையே வறுமை நிலை மேலோங்கி காணப்படுகின்றது என்றும் கருத்து வெளிப்பாடுகள் இருந்து வருகின்றன.

பெருந்தோட்ட மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு அரசாங்கத்தினால் கடந்த மற்றும் சமகாலத்தில் அமுல்படுத்தப்பட்டு வரும் நலன்புரி கொடுப்பனவுகள் உரியவாறு கை கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சமகாலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்துவரும் நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு உரியவாறு இத்திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு மலையக அரசியல்வாதிகள்  பல்வேறு காய்நகர்த்தல்களையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

உலக உணவுத் திட்டம் 

வறுமையின் உக்கிரத்துக்கு மத்தியில் பெருந்தோட்டப் பகுதிகளில் 51 சதவீதமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன், நாட்டின் ஏனைய இனங்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே அதிகளவானோர் இந்நிலையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் குறிப்பிட்ட சில குடும்பங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த காலப்பகுதியில் 24 சதவீதமான குடும்பங்கள் ஓரளவு உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு முங்கொடுத்திருந்தன. பின்தங்கிய மற்றும் நலிவுற்ற சமூகங்களைச் சேர்ந்த குடும்பங்கள் நாளாந்தம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துக் கொண்டமையே இதற்கு பிரதான காரணமாக அமைந்தது.

இதனிடையே 2023 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி நாடளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைவரம் தீவிரமடைந்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.இதன் விளைவாக பெருந்தோட்டப் பகுதி மக்கள் வெகுவாக பாதிப்படைந்திருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக நாட்டின் போஷணை மட்டம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. 2023 இல் 5 வயதுக்குக் குறைந்த சிறுவர்களில் 120,230 பேர் மிதமான மந்தபோஷணை நிலைக்கு  முகங்கொடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமூகப் பாதுகாப்பு செயற்திட்டங்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 27 சதவீதமானோரை சென்றடைந்திருப்பதுடன், இந்தப் பெறுமதி ஏனைய அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக உயர்வானதாகும்.இருப்பினும். இச்செயற்திட்டங்களை ஒருங்கிணைத்தல், முறையான கண்காணிப்பினை மேற்கொள்ளல் போன்றவற்றில் அரசாங்கம் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக உணவுத் திட்டத்தின் இவ்வருடத்துக்கான அறிக்கையின்படி பொருளாதார நெருக்கடியினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 11.7 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்கள் ஏற்கனவே வறுமையின் கோரப் பிடிக்குள் அல்லல்படும் நிலையில் சமகால நிலைமைகள் அதனை இரட்டிப்பாக்கி வருகின்றன. இது ‘மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்த’ நிலைக்கு ஒப்பானதாகும். இதேவேளை பெருந்தோட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையானது மாணவர்களின் கல்வி, சுகாதாரம், சமூக நிலை போன்ற பலவற்றிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாகும். இவற்றோடு பல்வேறு நோய் நொடிகள் ஏற்படுவதற்கும் இது அடிப்படையாக அமையும் என்பதனையும் மறுப்பதற்கில்லை. இதனை கருத்திற்கொண்டு அம்மக்களின் உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து அம்மக்களின் சகலதுறைசார் எழுச்சிக்கும் வித்திடுவது மிகவும் அவசியமாகும்.