உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படுவாா்களா? சஜித் பிரேமதாஸ கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வினாத் தொடுத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்ற போதிலும் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுக்கள் தங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. ஆனால் எதுவித பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சர்வதேச ஆதரவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா? இந்த விடயம் அமைச்சர்கள் சிலருக்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வாறில்லை.

சஹ்ரானுடன் அதிக தடவை தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட புலனாய்வுத் துறை அதிகாரி யார் என தெரிந்தாலும் மேலதிக விசாரணைகள் இடம்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே அதிக பயனடைந்தார். அவர் பதவியேற்றதன் பின்னர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 31 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தாக்குதல் இடம்பெறவுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவால் தகவல்கள் வழங்கப்பட்டன. அத் தகவல்கள் விடுக்கப்பட்ட திகதிகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார். விசாரணைகளின் மூலம் பிரதான சூத்திரதாரி யார் என எப்போது வெளிப்படுத்துவீர்கள். இந்த அனைத்து கேள்விகளுக்கும் இன்றே பதில் தேவைப்படுகிறது” சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.