உள்ளூராட்சித் தேர்தலுக்கு நடந்ததை போன்று ஜனாதிபதித் தேர்தலுக்கும் நடக்கலாம் – உதய கம்மன்பில

உள்ளூராட்சித் தேர்தலுக்கு நடந்ததை போன்று ஜனாதிபதித் தேர்தலுக்கும் நடக்கலாம் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளாா். ஜனாதிபதித் தேர்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று ஜனாதிபதி கூறுவது நம்பக்கூடியதாக இல்லை என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சட்டப்பூர்வ தன்மை இல்லை என்று கூறி இது தொடர்பில் கவனம் கொள்ளாது இருக்காலம். ஆனால் அப்படி இருந்துவிடக் கூடாது. கடந்த காலங்களை பார்க்கையில் இது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருக்கும். அதாவது உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் எவரோ ஒருவர் நீதிமன்றத்திற்கு போகும் போதும் இப்படிதான் கணக்கில் எடுக்காது இருந்தனர். ஆனால் கடைசியில் அரசாங்கத்திடம் பணம் இல்லை என்று தேர்தல் பிற்போடப்பட்டு தேர்தல் இன்னும் நடத்தப்படாது இருக்கின்றது” என்று தெரிவித்தாா்.

“இந்நிலையில் தற்போது 19 ஆவது அரசியலமைபில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6இல் இருந்து 5 வருடங்களாக குறைக்கும் நடவடிக்கைகள் முறையாக நடக்கவில்லை என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது, அவர் தனது பதவிக் காலம் தொடர்பில் நீதிமன்றம் சென்ற போது வழங்கிய தீர்ப்பு இப்போதைக்கு பொருந்தும் என்று அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். ஆனால் அப்படிக் கூறிவிட முடியாது. தனக்கு மக்கள் 6 வருடங்களுக்கே வாக்களித்துள்ளனர். அதன்படி 5 வருடங்கள் செல்லுபடியாகாது என்றே சிறிசேன கோரியிருந்தார். ஆனால் அந்த மனுவின் கோரிக்கைக்கும் இப்போதைய மனுவின் கோரிக்கைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இதனால் அந்தத் தீர்ப்பை இப்போதுள்ள மனுவுடன் ஒப்பிட்டு தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது” என்றும் உதய கம்மன்பில தெரிவித்தாா்.

மேலும் கருத்துத் தெரிவித்த உதய கம்மன்பில, “இப்போது சட்டத்தரணியொருவரே மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தமது சட்டத்தரணிகளுடன் ஆலோசிக்காது அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சரியாக விடயத்தை புரிந்துகொள்ளாமல் அது தொடர்பில் கூறுகின்றார். எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கும் இந்த மனுவுக்கும் இடையேயான தொடர்பு இருந்தால் எதிர்காலத்தில் தெரியவரும்” என்றும் தெரிவித்தாா்.