ஊழலை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதா?: சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவு மீது குற்றச்சாட்டு

ஊழலை விசாரிப்பதற்குப் பதிலாக, அதனை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதற்கே சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவினர் செயற்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கிடையில், செயலாற்றும் பதவிகள் மூலம் சுகாதார சேவையின் தகவல்களை மூடிமறைத்து, தகவல்களை அறியும் சந்தர்ப்பத்தையும் மறைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவின் 27 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய மருத்துவ வழங்கல் துறைக்கு கூட நிரந்தர துணை இயக்குநர் ஜெனரல் இதுவரை காலம் நியமிக்கப்படவில்லை.

மருத்துவ ஆய்வுகூட சேவையில் கடமையாற்றும் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளது. கடமையாற்றும் பதவிகள் காரணமாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் வீழ்ச்சி கண்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பெல்லெனாவை இடமாற்றம் செய்யுமாறு கோரி தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் நான்கு தடவைகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போதிலும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இடமாற்றம் செய்யுமாறு வைத்திய சங்கம் அச்சுறுத்திய நான்கு மணித்தியாலங்களில் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக” சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் சுட்டிக்காட்டினார்.