ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெற ஒத்துழைப்பு வழங்குவோம் – சஜித் பிரேமதாச

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு இலங்கை பாராளுமன்றத்தின் 225 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, இந்தியத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றும் போதே எதிரக்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,

“அடுத்தடுத்து மூன்றாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கும், மீண்டும் ஆட்சியமைக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றோம். இலங்கை இந்தியா இடையே நெருக்கமான நட்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இதனால் உலகில் அதிகளவான சனத்தொகையை கொண்ட இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்படுவது முக்கியமாகும். குறிப்பாக உலகளாவிய அதிகார கேந்திரநிலையமாக உள்ளஇந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை வழங்குவது உண்மையிலேயே செயற்படுத்தப்பட வேண்டியதே. இந்த பாராளுமன்றத்தின் 225 பேரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இதனால் இந்த யோசனையை நான் முன்வைக்கின்றேன்.

பிரதமர் மோடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அதிகளவான பிரதிநிதித்துவத்தை வென்று அடுத்தடுத்து ஆட்சியை பெற்றுக்கொண்டுள்ளார். இது இலகுவானது அல்ல. வரலாற்று நிகழ்வாகும். இதனால் பிரதமர் மோடியிடம் இருந்து நாங்கள் அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதாரம் விழ்ச்சியடைந்திருந்த போது மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு பொருளாதாரத்தை உயர்தியுள்ளார். இதன்படி அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றார்