ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல்? அரச உயா் மட்டத்தில் ஆராய்வு

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசு அவதானம் செலுத்தியுள்ளது. தோ்தல் ஆணைக்குழுவும் இந்தத் தினதியை பரிசீலனை செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்தத் தகவல்களில் கூறப்பட்டன.

இந்தத் தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் பதிலளிக்கையில், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனக் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் அரசின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார். இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட சனிக்கிழமை ஒன்றில் நடத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒக்டோபர் மாதத்தில் முதல் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.