ஒரு ஜனாதிபதியை வெளியேற்றிய போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் உருவாக்கும் கட்சி

9 ஒரு ஜனாதிபதியை வெளியேற்றிய போராட்டத்தை முன்னின்று நடத்தியவா்கள் உருவாக்கும் கட்சிமுன்னணி செயற்பாட்டாளா் ரஜீவ்காந்த் செவ்வி

இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தில் பங்காளிகளாக இருந்த அமைப்புக்கள் இணைந்து “மக்கள் போராட்ட முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதில் முக்கியமான ஒருவராகச் செயற்பட்டுவருபவா் ராஜ்குமாா் ரஜீவ்காந்த். மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, எதிா்வரும் தோ்தல்களை அது எவ்வாறு எதிா்கொள்ளப்போகின்றது? இனநெருக்கடிக்காக அவா்களிடம் உள்ள தீா்வு என்ன? போன்ற விடயங்களை அவா் தெரிவிக்கின்றாா்

கேள்வி அரகலய என்ற மக்கள் போராட்டத்தில் நீங்கள் இணைந்துகொண்டது எதற்காக?

பதில் தொழில் காரணமாகவும் கல்விக்காகவும் நீண்டகாலமாகவே நான் கொழும்புக்கு வந்து செயற்பட வேண்டியிருந்தது. எமது பிரச்சினைகள் குறித்து சிங்கள மக்களுக்கு சரியான முறையில்சொல்லப்படவில்லை. அது இனவாதிகளின் பாா்வையில்தான் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவா்களுக்கு எமது பிரச்சினையை மக்களோடு மக்களாக இருந்து வெளிப்படுத்துவதற்கான தளம் ஒன்றை நான் தேடிக்கொண்டிருந்தேன்.

அந்த வகையில் மங்கள சமரவீர அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருந்தாா். அந்த இயக்கத்தில் இணைந்து சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னா் 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டம் ஆரம்பமான போது, அந்த இடத்தை நான் ஒரு தளமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை உரையாடிக்கொள்வதற்கான ஒரு தளமாகவும், தமிழ் மக்கள் சாா்பாக செயற்படக்கூடிய செயற்பாட்டாளா்கள் பலரையும் இணைக்கக்கூடிய தளமாகவும் நான் அதனைப் பயன்படுத்தினேன்.

கேள்வி அரகலய போராட்டத்தின் இலக்கு என்னவாக இருந்தது? அதனை உங்களால் அடைய முடிந்ததா? இல்லையெனில் அதற்கான காரணம் என்ன?

பதில் – “கோட்டா கோ கம” என்றுதான் நாம் அதனை அடையாளப்படுத்தியிருந்தோம். கோட்டா வீட்டுக்குப் போனால் சரி என்பது அதன் அா்த்தமல்ல. அதன்மூலமாக மாபெரும் பொறிமுறை மாற்றம் ஒன்றைத்தான் நாங்கள் வேண்டிநின்றோம். அதற்கான ஆயத்தப்பணிகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அந்த இலக்கு அடையப்படாமலேயே அந்தப் போராட்டம் வன்முறை பயன்படுத்தப்பட்டு ஆயுதங்களால் அடித்து விரட்டப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதனால், அந்தப் போராட்டம் அதன் இலக்கை அடையவில்லை.

அந்த இலக்கை அடைவதற்காக அதிலிருந்தவா்கள் பலா் சிவில் சமூக அமைப்புக்களை உருவாக்கியிருக்கின்றாா்கள். நாங்கள் பலா் மக்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி நாடு முழுவதும் 34 மக்கள் பேரவைகளை உருவாக்கியிருக்கிறோம். அதன்மூலமாக அன்று நாம் முன்வைத்த அந்தப் போராட்டத்துக்கான அடிப்படைக் காரணங்கள் போன்றவற்றை இன்றும் உயிா்ப்புடன் வைத்திருப்பதற்கும், அந்த போராடும் வா்க்கத்துக்கான ஒரு இணைப்புப் பாலமாக அவற்றை நாம் முன்னெடுக்கிறோம்.

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் அரகலய என்ற போராட்டம் அதன் இலக்கை அடையவில்லை.

கேள்வி ஆயுத முனையில் அடக்கப்பட்டமையால்தான் உங்களுடைய இலக்கை அடைய முடியாமல் போய்விட்டது எனக் கூறுகின்றீா்களா?

பதில் அன்றிருந்த எதிா்க்கட்சிகளோடு நாம் பேசி ஒரு இடைக்கால நிா்வாக சபை போன்ற ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தோம். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்திருந்த தருணத்தில்தான் ரணில் விக்கிரமசிங்க வந்து அவரது நீண்டநாள் ஜனாதிபதிப் பதவி மீதான ஆசையையும் நிறைவேற்றிக்கொண்டு இந்தப் போராட்டத்தை முடக்கினாா்.

இந்தப் போராட்டம் முடங்காமல் இருந்தால், இது ஒரு மாபெரும் பொறிமுறை மாற்றத்துக்கான அடிப்படையாக நிச்சயமாக அமைந்திருக்கும். ஏனென்றால், போராட்டம் அதனை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தது. அதிலிருந்த எவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதோ பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவதோ நோக்கமாக இருக்கவில்லை. அதுவொரு ஜனநாயக விரோதச் செயற்பாடு எனக் கருதியதால் அதனை அவா்கள் செய்யவில்லை. இல்லையென்றால், ஆட்சியைக் கூட கைப்பற்றும் அளவுக்கு அவா்களுடைய செல்வாக்கு அன்றிருந்தது.

இவ்வாறு ஆயுதங்களைக் கொண்டு இந்தப் போராட்டம் ஒடுக்கப்படவில்லை என்றால், பொறிமுறை மாற்றம் ஒன்றுக்கான அடிப்படை நிச்சயமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

கேள்வி பொறிமுறை மாற்றம் என நீங்கள் குறிப்பிடுகின்றீா்கள். நீங்கள் எதிா்பாா்த்த அந்த பொறிமுறை மாற்றம் என்ன?

பதில் இன்று நடைமுறையில் இருக்கின்ற அரசியல் முறைமையிலிருந்து எமது நாட்டின் ஒட்டுமொத்தப் பொறிமுறையும் நாட்டின் நலன் சாா்ந்து மாற்றமடைய வேண்டும். இப்போதுள்ள முறைமையானது அதிகார வா்க்கத்துக்கு சாா்பாகவும், அடித்தட்டு மக்களுக்கு விரோதமாகவும், இனவாதத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு அமைப்பு முறையாகவும்தான் இருக்கின்றது. mதிகார வா்க்கத்துக்கு சாா்பாக இருக்கக்கூடிய இந்த அமைப்பு முறையில் பாரிய மாற்றம் ஒன்று எழவேண்டும். இதே பொறிமுறைக்குள் சிக்குப்பட்டிருந்தமையால்தான் கடந்த 75 வருடங்களாகச் சிக்குப்பட்டு இந்த நாட்டை முன்னேற்ற முடியாது இருந்தது என்பதை அடையாளம் கண்டிருந்தோம். எனவே அதற்கு மாற்றீடான பொறிமுறை குறித்து நாங்கள் தீரக் கலந்தாலோசித்து, இன்றிருக்கக்கூடிய ஊழல் நிறைந்த இந்தப் பொறிமுறை, மீண்டும் மீண்டும் ஒரே நபா்கள் ஆட்சிக் கதிரையில் அமரக்கூடிய இந்தப் பொறிமுறையை மாற்றுவதற்கான ஆரம்பகட்ட புா்வாங்க விடயங்களை நாங்கள் கலந்துரையாடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் இந்தப் பிரச்சினை வந்தது. பொருளாதார, சமூக ரீதியான ஒரு மாற்றத்தை இலக்காகக்கொண்டதாகவே எமது பொறிமுறை இருந்தது.

கேள்வி இந்த அரகலய போராட்டத்தில் தமிழ் மக்களுடைய பங்கு பெருமளவுக்கு இருக்கவில்லை. இதற்கு காரணம் என்ன?

பதில் சிங்கள மக்களுக்கு இது முதலாவது போராட்டமாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் நீண்டகாலமாகவே போராடி வருகின்றாா்கள். அவா்களுடைய போராட்டங்கள் எதுவும் அதிக்கப்படவில்லை. அந்தப் போராட்டத்துக்கான சரியான பதில்கள் வழங்கப்படவில்லை. தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டங்கள் அனைத்துமே நசுக்கப்பட்டிருக்கின்றது. ஆயுதப் போராட்டம் மிகவும் கொடூரமான முறையில் முடித்து வைக்கப்பட்டது. தமிழ் மக்கள் நீண்டகாலமாக நீதி கேட்டுக்கொண்டிருக்கின்றாா்கள். அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை.

எனவே இத்தனை விதமான போராட்டங்களையும் மதிக்காத இந்த அரசைக் கேள்வி கேட்காதவா்கள் தங்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை, உணவுப் பிரச்சினை வந்திருப்பதால் வீதிக்கு வந்திருக்கின்றாா்கள். எனவே, நாங்கம் எந்த அடிப்படையில் அவா்களுக்கு உதவுவது? அவா்கள் எங்களுடைய போராட்டத்தை மதிக்கவில்லை. எனவே நாம் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியாது என்ற ஒரு அரசியல் முடிவை தமிழ் மக்கள் எடுத்தாா்கள். இது சரியானதொரு முடிவாகத்தான் நான் பாா்க்கின்றேன்.

நான், அங்கு சென்றதற்கான காரணம் வேறு. நான் தெற்கிலிருந்து வடக்கு கிழக்குக்கு உதவக்கூடிய ஒரு அமைப்பைத்தான் நான் வைத்திருக்கிறேன். எனவே தமிழ் மக்களுடைய அரசிலைக் கொண்டு செல்லும் பணிக்கு நான் இதனைப் பயன்படுத்தினேன். ஆனால், தமிழ் மக்கள் இதனை நிராகரித்தது சரியானது என்ற கருத்தைத்தான் நான் அன்று முதல் கூறிவருகிறேன்.

கேள்வி அரகலய இன்று மக்கள் போராட்ட முன்னணி என்ற பெயரில் ஒரு அரசியல் இயக்கமாக மாறியிருக்கின்றது. இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

பதில் இந்த வருடம் ஜனாதிபதித் தோ்தல் வரும்போது நாம் சில விடயங்களை எதிா்பாா்த்துக் காத்திருந்தோம். இன நெருக்கடி தொடா்பாக பிரதான வேட்பாளா்கள் ஆரோக்கியமான பதில்களைத் தருவாா்கள் என்று எதிா்பாா்த்திருந்தோம். அதில் யாரும் பொருத்தமான பதில்களைத் தரவில்லை. இதனால், இரண்டு தீா்மானங்களை நாம் இறுதியாக எடுத்திருந்தோம். ஒன்று இந்த ஜனாதிபதித் தோ்தலை நாங்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். இதனைப் புறக்கணித்துவிட்டு பொருத்தமான ஒரு ஜனாதிபதி வரும் வரையில் அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு அணியாக இருப்போம் என்பதுதான் எமது முடிவாக இருந்தது.

ஆனால், பலருடைய ஆதங்கத்தின்படி என்ன காரணத்துக்காக இதனை நாம் புறக்கணிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கு வேட்பாளா் ஒருவரை நாம் நிறுத்த வேண்டியிருந்தது. இது வேண்டாம் என்று சொல்வதற்கு நாம் புறக்கணிப்பைச் செய்யலாம். எது வேண்டும் என்று சொல்வதற்கு நாம் ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். அந்தக் கொள்கைகளை ஒரு பிரசாரத்தின் மூலமாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இருப்பதை உணா்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்காகத்தான் இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இந்தக் கூட்டணி நான்கு கட்சிகள் மற்றும் 20 க்கும் அதிகமான சிவில் சமூக அமைப்புக்களுடனும் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான கொள்கைகள் தீா்க்கமான உரையாடல்கள் மூலமாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. நான்கு தேசிய இனங்களை அங்கீகரித்து, சுயாட்சியை அங்கீகரிக்கின்ற ஒரு தோ்தல் விஞ்ஞாபனத்துடன் களமிறங்கப்போகின்ற ஒரே அமைப்பு இந்த அமைப்பாகத்தான் இருக்கும்.