ஓய்வுபெற்ற படையினா் ரஷ்யா செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கட்டாயம் – அமைச்சா் அலி சப்ரி

ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இனிவரும் காலங்களில் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டியது கட்டாயமாகும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு விசா வழங்குவதற்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை ரஷ்யா கோரும் என இலங்கை அறிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் போரில் இலங்கையர்கள் ஈடுபடுத்தப்படுவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த அழுத்தமான கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் தீர்வு காண்பதற்கும் உடனடி நடவடிக்கைகளின் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இலங்கை பிரஜைகள் மோதலில் ஈடுபடுவதை ஒழுங்குபடுத்துவதையும் கண்காணிப்பதையும் இலக்காகக் கொண்ட இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியே புதிய விசா அனுமதியாகும். மேலும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சரின் ரஷ்யாவுக்கான விஜயம், விரிவான தீர்வைக் காண்பதற்கான மேலதிக உரையாடல்களையும் முயற்சிகளையும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.