கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 504 தமிழக மீனவர்கள் கைது – தமிழக மீனவா் சங்கங்கள் தெரிவிப்பு

இலங்கை கடற்படையினரால் கடந்த 2 ஆண்டுகளில் 504 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். எனவே, இந்தியா – இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு நடத்தி சுமுக முடிவை எட்ட வேண்டும் என மீனவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்வது குறைந்ததால், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கை குறைந்திருந்தது. ஆனால், 2022ஆம் ஆண்டில் 36 தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 264 மீனவர்களை கைது செய்தனர். இதேபோல், 2023ஆம் ஆண்டில் 35 மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து, 240 மீனவர்களை கைது செய்தனர்.

இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகள் மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோல், இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளி நாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கை
மீன்வளத் துறையால், கடந்த 2018 ஜனவரி 24 அன்று நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின் வாயிலாக, படகின் நீளத்தை பொறுத்து இலங்கை மதிப்பில் ரூ.50 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.17.5 கோடி வரையில் அபராதமும், கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை கடல் எல்லைக்குள் சிறை பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு, இந்த சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெறுகின்றன.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை மீனவருக்கு 14 மாதங்களும், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு மீனவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா – இலங்கை மீனவர்களிடையே பேச்சு நடத்தப்பட வேண்டும் என்று இந்தப் பேச்சில் எட்டப்பட்ட விடயங்களை சட்டமாக இயற்றி அவையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.