கடற்படைச் சிப்பாய் மரணம் குறித்து இந்திய இராஜதந்திரியை அழைத்து கரிசனை வெளியிட்ட இலங்கை

எல்லை தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை வீரர் உயிரிழக்க நேரிட்டமை குறித்து இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகாராலய இராஜதந்திரி ஒருவரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது கரிசனை வெளியிட்டுள்ளது.

தொடர்ச்சியான சட்டவிரோதமான மீன்பிடித்தல் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைள் குறித்தும் இழுவைமடி படகுகள் குறித்தும் இலங்கை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றையும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் இந்திய இராஜாதந்திரியிடம் கையளித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இந்திய இராஜதந்திரி இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரிசனையை வெளியிடுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு இந்த விடயத்தை இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் கொண்டுவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட பத்து இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளாா்கள். இவா்களைக் கைது செய்யும் போதே இலங்கைக் கடற்படைச் சிப்பாய் மரணமடைந்தமையால், அவா்கள் மீது கொலைக் குற்றஞ்சாட்டு வழக்குத் தொடரப்படவிருப்பதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.