கடும் பாதுகாப்புடன் துணைத் துாதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகன், ராபப்ட், ஜெயக்குமாா்

murugan கடும் பாதுகாப்புடன் துணைத் துாதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகன், ராபப்ட், ஜெயக்குமாா்இலங்கை செல்ல பாஸ்போர்ட் எடுப்பதற்காக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட மூவர் இலங்கை தூதரகத்தில் ஆஜராகினர். கடும் பாதுகாப்புடன் இவா்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக சென்னைத் தகவல்கள் தெரிவித்தன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில், ”விடுதலை செய்யப்பட்ட முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால், அவரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்காக முன் கூட்டியே இலங்கை தூதரகத்திடம் அனுமதி பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ”முருகனின் நேர்காணலுக்காக இன்று அனுமதி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் பாஸ்போர்ட் பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்துள்ளனர். ஆகையால் இன்று அவர்களையும் அழைத்துச் செல்ல உள்ளோம். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவல்துறையின் பாதுகாப்பில், முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் திருச்சியில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.