கட்சி தவிசாளர் பதவியிலிருந்து யாராலும் என்னை நீக்கமுடியாது – சரத் பொன்சேகா

“மற்றவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து மற்றும் களனி ஆசன அமைப்பாளர் பதவியிலிருந்து என்னை யாராலும் நீக்க முடியாது” என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கட்சிப் பதவிகளிலிருந்து தன்னை நீக்குவதற்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவை தான் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சரத் பொன்சேகா நீக்கப்பட்டார் என்று வெளிவரும் செய்திகள் தொடர்பில் அவர் தென்னிலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில், “நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம். நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் நீதிமன்றில் தடை உத்தரவு ஒன்றையும் பெற்றுள்ளேன். நான் வகிக்கும் தவிசாளர் பதவி மற்றும் களனி ஆசன அமைப்பாளர் பதவியிலிருந்து என்னை நீக்க முடியாது என்று தடை பெற்றுள்ளேன். இந்தத் தடை உத்தரவு தற்போது ஜூலை மாதம் 27ஆம் திகதி வரையில் உள்ளது. இதற்கு மேலும் தேவை ஏற்படும் போது அதனை நீடித்துக் கொள்ள முடியும்” என்றும் சரத் பொன்சேகா தெரிவிததாா்.

“மற்றவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப என்னை பதவியிலிருந்து நீக்க முடியாது. அவ்வாறு ஒரு தீர்மானத்தை யாரேனும் எடுத்தால் – அவ்வாறான கூற்றை யாரேனும் தெரிவித்தால் அது நிச்சயமாக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்” என்றும் எச்சரித்த சரத் பொன்சேகா, “உண்மை என்னவென்றால் நான் இன்னும் பதவிகளில் இருக்கின்றேன். இன்னும் கட்சியில் இருக்கின்றேன். கொள்கை ரீதியாக நான் கட்சியினுள் மனஸ்தாபத்தில் உள்ளேன்” என்றும் தெரிவித்தாா்.

மேலும் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா, “நாங்கள் புதிதாக ஒரு கட்சியை உருவாக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர். புதிய அரசியல் கலாசாரம் – ஊழலுக்கு எதிர்ப்பு – ஊழலில் ஈடுபடுபவர்களிடமிருந்து விலகி மக்களுடன் செல்லும் அரசியல் பயணம். அப்படி நினைத்துத்தான் கட்சியில் நாங்கள் இணைந்தோம். ஆனால், எதிர்ப்பார்த்த மாற்றம் அங்கு ஏற்படவில்லை. இதனால் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். அந்த விரக்தியிலேயே எனது கருத்தை வெளிப்படுத்துகிறேன்” என்றும் கூறினார்.