கட்டுநாயக்க கொண்டுவரப்பட்ட சாந்தன் உடல் – விடுவிக்க 4 மணி நேரப் போராட்டம்

301 10 கட்டுநாயக்க கொண்டுவரப்பட்ட சாந்தன் உடல் - விடுவிக்க 4 மணி நேரப் போராட்டம்கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடலை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த இழுபறி முடிவுக்கு வந்தது. உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டு பூதவுடல் சாந்தனின் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என உறவினர் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்படலாம் என சகோதரர் மதுசுதா தெரிவித்திருந்தாா்.

உரிய ஆவணங்கள் தொடர்பாக கட்டுநாயக்கவில் குடிவரவு – குடியகழ்வு அதிகாரிகள் வினவியதால் தாமதம் ஏற்பட்டதாக தெரிகின்றது. சாந்தனின் பூதவுடலுடன் வருகைதந்த சட்டத்தரணி புகழேந்தி, உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதில் ஈடுபட்டாா்.

இந்தியாவில் மரணமடைந்த சாந்தனின் பூதவுடல் சென்னை விமான நிலையம் ஊடாக கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தது. சாந்தனின் பூதவுடலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சில ஆவணங்களை கோரியதால் 4 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இது தொடா்பாக மதி சுதா தனது பதிவில், “ஒரு மனிதன் பிணமாக வருவதற்கு கூட இந்த ஆவணங்களுடனும் அதிகாரிகளுடனும் போராட வேண்டியுள்ளது. சாந்தனின் உடலை பொறுப்பேற்க வேண்டியவரது சகல ஆவணங்களுடன் மைத்துனர் விமான நிலையத்தில் காத்திருக்கிறார். ஆனால் Air bill இல் பெற வேண்டிய பெயரில் இறந்தவரின் பெயரை போட்டு விட்டதால் அவரே வந்தால் தான் பெறலாம் என்ற நிலையில் அந்த பற்றுச் சீட்டை மீள் திருத்துவதற்காக 4 மணித்தியாலமாக போராடிக் கொண்டிருக்கின்றோம்” எனத் தெரிவித்திருந்தாா்.

இந்தநிலையில் பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உடல் கையளிக்கப்பட்டது.