காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

0108 காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்புவவுனியாவில் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகர சபை கலாசார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். ஜனாதிபதியின் விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்துக்குச் செல்லும் பாதையில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்குப் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதிவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது. ஜெனிற்றா மற்றும் போராட்டத்தை வீடியோ எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்குப் பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது ஜெனிற்றாவை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறும், போராட்டத்தை வீடியோ எடுத்த பெண்ணுக்குப் பிணை வழங்கியும் வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஜெனிற்றாவை நீதிமன்றில் ஆஜர்படுத்திய சமயத்தில் அவரைக் கைது செய்த நடவடிக்கையின் போது இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தமையால் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டிலும், நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டிலும் ஜெனிற்றாவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.