காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாரில்லை – அரச உயர் வட்டாரங்கள் தெரிவிப்பு

சூழல் பாதிப்புகள் குறித்த கரிசனைகள் வெளியாகியுள்ள போதிலும் அரசாங்கத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் தயாரில்லை என அரசாங்ககத்தின் உயர்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சின் வட்டாரங்களே இதனை தெரிவித்துள்ளன.

காற்றாலை மின்உற்பத்தி திட்டம் தொடர்பான இடம்குறித்து எந்த விட்டுக் கொடுப்பிற்கும் தயாரில்லை என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சக வட்டாரங்கள், சூழல் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாத்திரம் அரசாங்கம் தயார் என குறிப்பிட்டுள்ளன.

மன்னார் பூநகரியில் உருவாகவுள்ள அதானி கிறீன்ஸ் நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தினால் சூழலுக்கு பாதிப்பு, அந்த திட்டம் தொடர்பில் போதிய வெளிப்படைதன்மை இல்லை போன்ற கரிசனைகள் வெளியாகியுள்ளதுடன் இது தொடர்பில் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மன்னாருக்கு 150 க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வருவதற்கு காரணமான மத்திய ஆசிய பறப்பு பாதையில் உருவாகவுள்ள இந்த திட்டத்திற்கு இலங்கையின் பேண்தகு எரிசக்தி அதிகாரசபை அனுமதியை கோரியுள்ளது. எனினும் இந்த பகுதியிலேயே காற்றலை மின் உற்பத்திக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உயர் அதிகாரியொருவர் ஆகவே இது குறித்து எந்த விட்டுக்கொடுப்பையும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த திட்டம் காரணமாக வலசப் பறவைகளின் பாதைகள் அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் இனப்பெருக்க முறைகள் ஆகியவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தயார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்புகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் தயார் , என அவர் தெரிவித்துள்ளார்.