கீரிமலை ஜனாதிபதி மாளிகை பிரதேசத்தில் இரகசியமாக நில அளவை

கீரிமலை ஜனாதிபதி மாளிகை பிரதேசத்தில் இரகசியமாக நில அளவைகீரிமலை ஜனாதிபதி மாளிகை பிரதேசத்தில் எவருக்கும் தெரியாது இரகசியமாக நில அளவைப் பணிகள் இடம் பெற்றுள்ளன.

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஜே/233 கிராம சேவகர் பிரிவில் தனியாருக்குச் சொந்தமான நிலம் மற்றும் சைவ அடையாளங்களை அபகரித்து மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இரகசியமாக ஜனாதிபதி
மாளிகை அமைக்கப்பட்டது. இந்த ஜனாதிபதி மாளிகை கோட்டபாய ராஜபக்ஷவின் காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கடந்த ஆண்டு தனியார் பல்கலைக் கழகத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு ஒப்பந்தம் எழுதப்பட்டது.

இந்தநிலையில், தனியார் காணிகளைச் சுவீகரிப்பு செய்வதற்காக யாழ்ப்பாணம் நில அளவைத் திணைக்களம் 5 தடவைகள் முயன்றபோதும் நில உரிமையாளர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாகத் தடுக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக தம்மால் அளவீடு செய்ய முடியவில்லை என்று யாழ்ப்பாணம் நில அளவைத் திணைக்களம், நில அளவைத் திணைக்கள தலைமைப் பணிமனைக்கு அறிவித்திருந்தது.

இதையடுத்து கொழும்பு தலைமைப் பணிமனையில் இருந்து கடந்த மாதம் 16 ஆம் திகதியன்று வருகை தந்த உத்தியோகத்தர்கள் கடற்படையினரின் பாதையின் ஊடாக உள்நுழைந்து அந்தப் பிரதேசத்தை முழுமையாக அளவீடு செய்து பணிகளை நிறைவு செய்து அந்தப் பகுதி கிராம சேவகர்களிடமும் ஒப்பம் பெற்றுச் சென்றுள்ளனர்.

இவை தொடர்பில் யாழ்ப்பாணம் நில அளவைத் திணைக்களத்தினரிடம் எந்தவொரு தகவலோ அல்லது அளவீட்டு வரை படமோ இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.