கொக்குத்தொடுவாய் அகழ்வில் 12 மனித எச்சங்கள் முழுமையாக மீட்பு

06 1 கொக்குத்தொடுவாய் அகழ்வில் 12 மனித எச்சங்கள் முழுமையாக மீட்புமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் 12 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு இன்றுடன் பத்து நாட்களை அடைந்துள்ளது. இன்றைய பத்தாம் நாள் அகழ்வில் 5 மனித எச்சங்களும் ஒரு துப்பாக்கி சன்னமும் திறப்பு கோர்வையும் மீட்க்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் புதைகுழி ஏற்கனவே இரண்டு கட்டங்களாக அகழ்ந்தெடுக்கப்பட்ட போது 40 மனித எச்சங்கள் முழுமையாக மீட்க்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வில் மேலதிகமாக இன்றுடன் 12 மனித எச்சங்கள் முழுமையாக மீட்க்கப்பட்டதோடு மொத்தமாக மூன்று கட்ட அகழ்வுகளிலும் 52 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் , முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த 10ஆம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை நாளையதினம் கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வுகள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.