கொக்குத் தொடுவாய் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட அகழ்வாய்விலேயே இவை கண்டறியப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் மூன்றாவது கட்டமாக தொடரும் அகழ்வில் நேற்று 6ஆவது நாளாக அகழ்வாய்வு தொடர்ந்தது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட தரப்புகளின் பங்குபற்றுதலுடன் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, இரண்டாவது நாளாகவும் ஐ.நா. சபையின் இலங்கைக்கான பணிமனையின் மனித உரிமைகள் பணியாளர் செல்ரின் அகிலனும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதியின் கீழாக தோண்டப்பட்டிருந்த இந்தப் பகுதியில் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன், துப்பாக்கி சன்னங்கள், இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் வேலிக் கம்பிகளின் துண்டுகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன.

நேற்று அடையாளம் காணப்பட்ட 3 மனித எலும்புக்கூட்டு எச்சங்களுடன், இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் அடையாளம் காணப்பட்ட 4 மனித எலும்புக்கூட்டு எச்சங்களையும் சேர்த்து 7 எலும்புக்கூடுகளும் வரும் நாட்களில் முழுமையாக வெளியே எடுக்கப்படும் என்று தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ, மனித உரிமைகள் சட்டத்தரணி நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

முன்னதாக, இரு கட்டங்களாக நடத்தப்பட்ட அகழ்வு பணிகளில் 40 மனித எலும்புக்கூடு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.