கோட்டாவிற்கு மக்கள் வழங்கிய காலம் வரையில் மட்டுமே ரணில் ஜனாதிபதிப் பதவியை வகிக்கலாம் – பஃரல் அமைப்பு

நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ், பதில் ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிக்க வாய்ப்பில்லை எனவும், அவ்வாறு சட்டத்திற்கு மாறாக அதிகாரத்தை மேலும் நீட்டிக்க முயற்சித்தால், அதனை நீதிமன்றில் முன்னிறுத்துவதாகவும், பஃரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 40 வது பிரிவின்படி, மக்கள் ஆணையால் தெரிவாகிய ஜனாதிபதி தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் பதவி விலகினால், அதற்கு மற்றுமொரு பொருத்தமான நபர் நாடாளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு தெரிவாகும் நபர் பதவி விலகிய முன்னைய ஜனாதிபதியின் மிகுதி பதவிக் காலம் முடியும் வரையில் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, கோத்தபாய ராஜபக்சஷவுக்கு இந்த வருடம் வரையில் தான் மக்கள் ஆணை கிடைத்திருந்தது, அவரது பதவி காலத்திற்கு மேலதிகமாக ஆட்சியில் இருப்பதற்கு ரணில் விக்ரமசிங்க முயற்சித்தால் அது மக்கள் ஆணைக்கு எதிரானது எனவும் ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.