சம்பந்தனின் நோக்கம் நிறைவேற பிரதமர் மோடி ஒத்துழைப்பு வழங்குவார் – அண்ணாமலை

05 சம்பந்தனின் நோக்கம் நிறைவேற பிரதமர் மோடி ஒத்துழைப்பு வழங்குவார் - அண்ணாமலை“சம்பந்தன் முக்கிய நோக்கத்துக்காக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள்” என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற மறைந்த இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

“91 ஆண்டுகள் இனமொன்றின் விடுதலைக்கான இயக்கத்தில் பணியாற்றிய தலைவர் ஒருவர் மறைந்த துக்கமான தருணத்தில் இணைந்திருக்கின்றோம். அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் இலக்கணமாக இருந்ததோடு அரசியல் கொள்கையில் நெஞ்சுரத்துடன் நேர்மையாக இருந்துள்ளார். அவரொரு சட்டத்தரணியாக இருந்தபோதிலும் 1956 இல் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொள்கை ரீதியான அரசியலை முன்னெடுத்தார். சம்பந்தன் தாம் எடுத்த பணியை இயன்ற அளவில் முன்னெடுத்து, இங்கிருக்கின்ற அனைத்துத் தலைவர்களும் அடுத்தகட்ட பிரதிநிதிகளுக்கும் தனது பணியை தொடர்ந்து முன்னெடுத்து நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று விட்டுச் சென்றுள்ளார்.

07 சம்பந்தனின் நோக்கம் நிறைவேற பிரதமர் மோடி ஒத்துழைப்பு வழங்குவார் - அண்ணாமலைபாரத பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் சம்பந்தனை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தினை அவர் மீண்டும் பகிர்ந்து நினைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். விசேடமாக தமிழர்களுக்கு நேர்மையானதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை நினைவுகூர்ந்துள்ள பிரதமர் மோடி உணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளார். நான் இங்கு நின்றுகொண்டிருப்பதற்கான காரணம், தமிழக மக்களும் பாரதிய ஜனதா கட்சியும் எந்தளவு தூரம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றோம் என்பதன் வெளிப்பாடாகும்.

அதேநேரம், சம்பந்தன் முக்கிய நோக்கத்துக்காக வாழ்ந்து மறைந்திருக்கின்றார். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினரும், பிரதமர் மோடியும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள். அத்துடன் சம்பந்தன் விட்டுச்சென்ற பணியை முன்னெடுப்பதற்காக அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நான் கேட்டுகொள்கின்றேன்” என்றார்.