சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது – சுரேஷ்

சம்பந்தனின் பெயரில் சுமந்திரன் கருத்துரைக்கின்றமை வலுவான சந்தேகத்தைத் தருகின்றது என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருக்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அவரது அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

‘கடந்த சில மாதங்களாக தமிழ்ப் பொது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தமிழ் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தமது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பெருமளவிலான தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரின் தேவையை உணர்ந்திருக்கின்றனர். இது தொடர்பாக பல்வேறுபட்ட கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு செயற்பாட்டுக்குழுவை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழரசுக் கட்சி ஒரு கட்சியாக முழுமையாக இணைந்து பணியாற்றுவதற்கு 19ஆம்திகதிவரை கால அவகாசம் கோரியிருந்தார்கள். வடக்கிலும் கிழக்கிலும் இருக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் இதற்கான தமது சாதகமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழரசுக் கட்சியின் போஷகராக இருக்கக்கூடிய – மூத்த தலைவராக பேசப்படுகின்ற – சம்பந்தன் அவர்கள் பொது வேட்பாளர் ஒருவர் இப்பொழுது தேவையில்லை என்றும் உள்ளக சுயநிர்ணய உரிமை மூலம் சமஷ்டி ஆட்சிமுறையை உருவாக்குகின்ற ஒஸ்லோ
பிரகடனத்தைக் கைவிட்டுவிடக்கூடாது என்றும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் பொதுவேட்பாளர் தெரிவை அங்கீகரிக்கக்கூடாது என்றும் கூறினார் என சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக தவறான – பிழையான – அதற்கு எதிரான – கருத்துகளைக் கொண்டிருக்கக்கூடிய சுமந்திரன் சம்பந்தன் இவ்வாறான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்று சொல்வது வலுவான சந்தேகங்களை உருவாக்குகின்றது. சம்பந்தன் வயதில் முதிர்ந்த ஒரு அரசியல் தலைவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவரது வயது முதிர்ச்சி என்பது அந்த முதிர்ச்சிக்கே உரிய பல்வேறுபட்ட உளவியல், உடலியல் மாற்றங்களுக்கு உட்பட்டிருப்பதுடன் அவர் பேசுவதை யாருமே புரிந்துகொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில், சம்பந்தன் பொது வேட்பாளர் தொடர்பில் பல கருத்துகளைக் கூறியிருக்கிறார் என்பது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சம்பந்தன் நடமாட முடியாத சூழ்நிலையிலும், செயற்படும் திறனற்றவராகவும் இருக்கிறார் என்றும், அவர் நாடாளுமன்ற பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் சம்பந்தன் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தவர் சுமந்திரன் ஆவார். செயற்பட முடியாத – பேச்சாற்றல் குறைந்திருக்கக்கூடிய – ஒருவரின் கூற்றாக தனது தேவை கருதி அவற்றை முதன்மைப்படுத்தும் நடவடிக்கையில் சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேவையையும் அவசியத்தையும் முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் எழுந்தமானமாக அது ஓஸ்லோ உடன்படிக்கையை கைவிட்டு விடுவதாக அமைந்துவிடும் என்று கற்பனை அடிப்படையில் கூறுவது தவறானதும் மக்களைத் தவறாக வழிநடத்துவதுமாகும். யுத்தத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதினேழு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியது. இதில் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து எதுவும் பேசப்படவில்லை.

பின்னர் மைத்திரிபால சிறிசேன அவர்களது அரசாங்கத்தில் நான்கு வருடங்களாக ஒரு புதிய அரசியல் சாசனம் பற்றிப் பேசப்பட்டது. அப்போதும் ஓஸ்லோ உடன்படிக்கை குறித்து பேசப்படவில்லை. ஆனால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசம் எதிர்பார்க்கும் ஜனநாயக வழியில் நின்று வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் களத்தை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாகக் கையாள வேண்டும் என்ற நோக்கில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதானது ஓஸ்லோ உடன்படிக்கைகளுக்கு விரோதமானது என்ற கருத்தை பொதுவெளியில் குறிப்பிடுவதும் அதற்கு எதிராகச் செயற்படுமாறு தமிழரசுக் கட்சியினரைக் கோருவதும் தமிழரசுக் கட்சி இது தொடர்பாக ஒரு சாதகமான முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது.

சுமந்திரன் அவர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் தவறானதும் பிழையானதுமான கருத்துகளை சரியான கருத்துகள்போல் பேசிவந்துள்ளார். உதாரணமாக ஐ.நா.சபையால் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டு அந்தக்குழு ஓர்
அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தது. பின்பு அந்த அறிக்கை ஐ.நா. பொதுச் செயலாளரினால் மேல் நடவடிக்கைக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திடம் கையளிக்கப்பட்டது. இதனையே சுமந்திரன் அவர்கள் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்றும், இனி உள்ளக விசாரணைகள் மூலம் தண்டனை வழங்வது மட்டுமே மீதமுள்ள நடவடிக்கை என்றும் கூறிவந்திருக்கின்றார்.

ஆனால் இன்றுவரை யுத்தக்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக தமிழர் தரப்பு தொடர்ந்தும் போராடி வருகின்றது. இதனைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற ஒரு பொய்யான விடயத்தையும் அவர் கூறி வந்திருக்கின்றார். ஆகவே தமிழ் மக்களைப் பிழையான பாதையில் வழிநடத்தும் கைங்கரியத்தை அவர் தொடர்ச்சியாக செய்து வருகின்றார். அதன் இன்னொரு வெளிப்பாடாகவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அவரது கருத்துகள் அமைகின்றன.

தற்போது களத்திலிருக்கக்கூடிய சிங்களத் தரப்பு வேட்பாளர்கள் யாரும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் காணி அபகரிப்புகள், சிங்கள குடியேற்றங்கள், பௌத்த சின்னங்களை நிறுவுதல், சைவஆலயங்களை இடித்து அழித்தல், மேய்ச்சல் நிலங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுதல், தமிழ் மக்களின் பாரம்பரிய சின்னங்களை அரசுடைமை ஆக்குதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக எந்தவிதமான கருத்துகளையும் கூறாமல் அதனை ஏற்றுக்கொண்ட பார்வையாளர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வரும்வரையில் நாங்கள் எத்தகைய நகர்வுகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கருதுவது அபத்தமான செயற்பாடாகும்.

ஜனாதிபதி தேர்தல்களத்தில் ஒருவர் வெல்வதென்பது தமிழ் மக்களின் வாக்குகளிலும் தங்கியிருக்கின்றது. வடக்கு-கிழக்கில் இருக்கின்ற ஏறத்தாழ பன்னிரண்டு இலட்சம் வாக்குகள் என்பது ஒருவரின் வெற்றிக்கு மிகக் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தக்கூடியவை. இந்த நிலையில் யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தலைக்கூட நடத்தாமல் கடந்த ஐந்து வருடத்திற்கும் மேலாக மாகாணசபையின் நிர்வாகமற்ற சூழலில் இந்த நாட்டில் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்றும் வெறுமனே பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமே இருக்கின்ற தென்றும் பேசிவரும் சூழ்நிலையில் இவை எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதை முழுமையாக வெளிக்காட்டவும் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்பதை சிங்கள அரசியல் சமூகத்திற்கும் இராஜதந்திர சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாகவும் தமிழ் வாக்குகளை தமிழர் ஒருவர் பெற்றுக்கொள்வதன் ஊடாக இதனை வெளிப்படுத்த முடியும் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்களுக்கு விளங்கும்.

இந்த நிலையில், தமிழ் தரப்புகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் அனாவசியமான கருத்துகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதானது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளை முறியடிப்பதாகவே அமையும். தமிழரசுக் கட்சி இந்த யதார்த்தங்களை உணர்ந்துகொண்டு இப்பொழுதாவது சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் என்று நம்புகின்றோம்” என்று உள்ளது.