சர்வதேசத்தின் கண்காணிப்பில், மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்-அனந்தி சசிதரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட  வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

இப்பொழுதும் மன்னார் புதைகுழி மறைக்கப்பட்ட ஒன்றாக வந்துள்ள நிலையில் கொக்குதொடுவாய் புதைகுழி விடயம் கூட ஊடகத்தினூடாகவே பெருமளவு மக்களின் காதுகளை சென்றடைந்துள்ளது.

இந்த கொக்குதொடுவாய் புதைகுழியானது, சர்வதேச நியமத்தின் அடிப்படையில் அதாவது அனுசரணையாளர்களின் மேற்பார்வையில் தோண்டப்பட வேண்டும்.

ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோரை அவர்களது உறவுகள் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.

இலங்கையை பொறுத்தவரையில், இந்த ஆய்வுகளின் களப்பணிக்குரிய அறிவும் ஆற்றலும் எந்தளவுக்கு சர்வதேச நியமத்துக்கு உட்பட்டுள்ளது என்றொரு கேள்வியுள்ளது.

ஆகவே, சர்வதேசத்தின் கண்காணிப்பில், அவர்களின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தனது கோரிக்கையை முன்வைக்கிறார்.