சர்வதேச விசாரணை தேவை என்பதை உணர்த்தும் அரசின் நடவடிக்கை – கஜேந்திரகுமார்

கோட்டாபய அரசாங்கம் தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கி நியாயமான தீர்ப்பு முறையில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. இதனைத்தான் தமிழ் மக்களும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கூறுகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

“உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமக்கு நம்பிக்கையில்லை என்பதை அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் அரசாங்கம் இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டியுள்ளது. இதனைத்தான் தமிழ் மக்களும் 2009ஆம் ஆண்டுமுதல் வலியுறுத்துகின்றனர். இதன் ஊடாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளே பொருத்தமானதாக அமையும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.

நானும் எனது கட்சியும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள். இது தொடர்பில் நீதிமன்றில் போராடினோம் . நீதிமன்றில் வழக்குகளை தாக்கல் செய்தோம். அரசியல் ரீதியாக தூண்டப்பட்டே எமக்கு எதிரான பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நான் தனிப்பட்ட ரீதியில் குற்றம்சாட்டப்பட்டிருந்தேன். பின்னர் விடுவிக்கப்பட்டேன். பின்னர் எனது நண்பர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நாட்டில் மோசமான ஒரு கலாசாரம் உள்ளது. அமையும் ஒவ்வொரு அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதே அது. தற்போதுள்ள அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கி நியாயமான தீர்ப்பு முறையில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. அரசாங்கமானது நீதிமன்றத்துக்குச் செல்லாது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாது முந்தைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆணைக்குழுவின் ஊடாக தீர்வு காணமுற்படுகிறது.

அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்ய முடியும். அதே போன்று பல வழிமுறைகள் உள்ளன. ஆனால், விசேட ஜனாதிபதி ஆணைகுழுவை உருவாக்கி ஏன் எவ்வாறு செய்கின்றனர்? அரசாங்கத்துக்கு தமது சொந்த நீதித்துறையில் நியாயமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாதென்ற நம்பிக்கையின் பிரகாரமே ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளது.

இதனைத்தான் தமிழ் மக்களும் கடந்த 2009 ஆம் ஆண்டுமுதல் கூறுகின்றனர். போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதால் சர்வதேச குற்றவியல் விசாரணையை கோரியுள்ளனர். ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் உள்ளக விசாரணை நடத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

ஆனால், இவ்வாறான விசாரணை ஆணைக்குழுக்களை உருவாக்கி அதே நீதிமன்றங்களை தவிர்ப்பதற்கு முற்பட்டுள்ளனர். ஆகவே, இந்த நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இவர்களுடைய நீதித்துறையின் மேல் நம்பிக்கையில்லை யென்பதை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளனர்.

இப்பொழுது நடப்பதை பார்க்கும் போது தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவர். கடந்த சில ஆண்டுகளாக கையாளப்பட்ட நீதித்துறை முறைமையற்றதென விளங்கியுள்ளது. இந்த அரசாங்கம் தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் சர்வதேச சமூகத்திற்கு இதனை நிரூபித்துக்கொண்டிருக்கிறதுஎன்றார்.