சாந்தனின் பூதவுடல் இன்று காலை கொழும்பு கொண்டுவரப்படுகின்றது – யாழ்ப்பாணத்தில் இறுதி அஞ்சலி

சென்னையில் காலமான சாந்தனின் பூதவுடல் இன்று அங்கிருந்து முற்பகல் 9.45 மணிக்குக் கொழும்பு வரும் விமானத்தில் எடுத்து வரப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஈழத் தமிழன் சாந்தனை, 2022.11.11 அன்று உச்சநீதி மன்றம் விடுதலை செய்திருந்தது. அவர் தாயகம் திரும்பும் முயற்சியில் இருந்த வேளை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு அவர் தாயகம் திரும்பவிருந்த நிலையில், காலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரின் பூதவுடல், இன்று முற்பகல் 9.45 மணிக்கு கொழும்பு நோக்கி வரும் விமானத்தில் எடுத்து வரப்படவுள்ளது. நண்பகல் 12 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவரின் பூதவுடல் வெளியே எடுத்து வரப்படும்.

கொழும்பில் இருந்து பூதவுடலை உடனடியாக யாழ்ப்பாணம் எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.