சாந்தனுக்கு இன்று இறுதி அஞ்சலி – எள்ளங்குளம் மயானத்தில் வித்துடல் விதைக்கப்படும்

3 4 9 சாந்தனுக்கு இன்று இறுதி அஞ்சலி - எள்ளங்குளம் மயானத்தில் வித்துடல் விதைக்கப்படும்பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு கண்ணீர் சிந்தி – கதறி அழுது – பூக்கள் தூவி அஞ்சலி செலுத்த சாந்தனின் வித்துடல் நேற்று மாலை அவரின் சொந்த இடமான உடுப்பிட்டி – இலக்கணாவத்தைக்கு எடுத்துவரப்பட்டது. இன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன. இதைத் தொடர்ந்து இறுதி
வணக்க உரைகள் இடம்பெற்று எள்ளங்குளம் இந்து மயானத்தில் அவரின் வித்துடல் விதைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சாந்தன் என்று அறியப்பட்ட தில்லையம்பலம் சுதேந்திரராஜா கடந்த 28ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் வித்துடல் விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் கொண்டு வரப்பட்டது. சாந்தனின் உடலத்துக்கு மீண்டும் பிரேதபரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

நீர்கொழும்பில் இருந்து வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்ட வித்துடல் ஊர்தி பயணமாக யாழ்ப்பாணம் நோக்கி எடுத்து வரப்பட்டது. வவுனியாவிலுள்ள போராளிகள் நலன்புரி சங்கத்துக்கு முன்பாகவும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலும் வித்துடல் அஞ்சலிக்கு நிறுத்தப்பட்டது. இரு இடங்களிலும் பெருமளவான மக்கள் கூடி கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர்.

பொலிஸார் தடங்கல் வவுனியா பழைய பேருந்தில் ஊர்தியை நிறுத்தி வைக்க முடியாது என்று அங்கு நின்ற பொலிஸார் ஊர்தியாக வந்தவர்களிடத்தில் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஊர்தி வாகனத்தின் சாரதியை கைது செய்ய முனைந்தனர். பின்னர், அங்கு நின்ற சிலர் பொலிஸாருடன் சமரசத்தை ஏற்படுத்தி அஞ்சலியை தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து பயணித்த ஊர்தி மாங்குளத்தை அடைந்தது. அங்கும் மக்கள் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கிளிநொச்சியை வந்தடைந்த சாந்தனின் வித்துடல், அங்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மண்டபத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டத. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான பசீர் காக்கா ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தமிழ்த் தேசியக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து மக்கள் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இயக்கச்சி, இத்தாவில் பகுதிகளில் சாந்தனின் வித்துடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன் பின்னர், கொடிகாமம் – நெல்லியடி வீதி வழியாக பயணித்த ஊர்திக்கு நெல்லியடியை அடைந்த போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தற்போதும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தாயாரும் சகோதரியும் அஞ்சலி செலுத்தினர். அத்துடன், சாந்தனுக்காக தமிழ்நாட்டில் வழக்காடிய சட்டத்தரணி புகழேந்தியும் அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து வல்வெட்டித்துறை தீருவிலுக்கு ஊர்தி பயணமானது. அங்கு பெருந்திரளான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், சமூக பிரமுகர்கள் பலரும் அங்கு அஞ்சலி செலுத்தியுடன் இரங்கல் உரையும் ஆற்றினர்.

மாலை 6 மணியளவில் தீருவிலில் இருந்து சாந்தனின் சொந்த இல்லம் அமைந்துள்ள உடுப்பிட்டி இலக்கணாவத்தைக்கு பயணமானது. 35 ஆண்டுகாலம் தனது மகனை பிரிந்து – காணாது அவரின் வருகைக்காக பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து போராடிய தாய் மகனின் வித்துடலை கண்டு கதறி அழுதார். சாந்தனின் தங்கை ஆரத்தி எடுத்து வித்துடலை வரவேற்றார். அப்போது, “என் தெய்வம் வீட்டுக்கு வருகின்றது, யாரும் அழக் கூடாது”, என்று அவர் உருக்கமாகக் கூறியது அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது.

சாந்தனின் வித்துடல் ஊர்தி வவுனியாவிலிருந்து புறப்பட்டு தீருவிலை அடையும்வரை குடிமனைகள் உள்ள பகுதிகள் அனைத்திலும் வீதிகளில் திரண்ட மக்கள் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தாய்மார் கண்ணீர் சிந்தி அழுது
தமது துயரத்தை வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி – உடுப்பிட்டியை சேர்ந்தவரான சாந்தன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 4 இலங்கையர் உட்பட 7 பேர் 32 வருடங்களுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் சாந்தன் உட்பட 6 பேரும் (பேரறிவாளன் முன்னரே விடுதலையானார்) 2022 நவம்பர் 11ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நிலையில், கல்லீரல் செயலிழப்பால் சாந்தன் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிசசை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இலங்கை திரும்பவிருந்த கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி காலை மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.