சுதந்திரக் கட்சியை தம்வசப்படுத்த சந்திரிகா தரப்பு தீவிரம்

இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்பாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அரசாங்கத்திலிருந்து அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு பக்கம் மைத்திரிபால – விஜேதாச தலைமையிலான குழு, இன்னொரு பக்கம் சந்திரிகா – நிமல் சிறிபால தலைமையிலான குழு என இரண்டு குழுக்களாக பிளவடைந்த நிலையில் காணப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த வாரம், நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து கிடைத்த செய்தியில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரத்தியேக உரிமைகளை அவர் விரைவில் கையகப்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதற்குக் காரணம், எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் 17 அல்லது 20 பேர் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதால், அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு இணங்கியுள்ள நிமல் சிறிபால டி சில்வா இந்தக் குழுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் விரைவில் இணைப்பதற்கான கட்சியின் உத்தியோகபூர்வ உரிமைகளைப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் பதில் தவிசாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டார். எனினும் அந்த நியமனத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மைத்திரிபால விஜேதாச தலைமையிலான குழுவில் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.