சுவீடனிலும் பொருளாதார வீழ்ச்சி

உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார வீழ்ச்சியில் தற்போது மேலும் ஒரு ஐரோப்பிய நாடும் சிக்கியுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் சுவீடனின் மொத்த உற்பத்தித்துறை 0.8 விகிதத்தால் வீழ்ச்சி கண்டதால் அது பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்றுள்ளதாக Statistics Sweden என்ற நிறுவனம் கடந்த செவ்வாய்கிழமை (29) தெரிவித்துள்ளது.

நோர்ட்டிக் பிராந்தியத்தில் உள்ள பெரிய பொருளாதார நாட்டின் ஏற்றுமதித்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்த பின்னடைவுக்கான காரணம். பணவீக்கமும் கடந்த வருடம் அதிகரித்துள்ளது. அதனை தடுப்பதற்காக வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. வட்டிவிகித உயர்வு மக்களின் செலவீனங்களை குறைத்துள்ளது. அது பொருளாதாரத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

வாகன ஏற்றுமத்தித்துறையும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பல நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகள் சுவீடனின் வாகன எற்றுமதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் அதனை தொடர்ந்து ரஸ்யா மீதான பொருளாதாரத்தடைகள் என்பன உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புக்களை ஏற்படுத்தினாலும், ஐரோப்பிய நாடுகளே அதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

பின்லாந்து மற்றும் சுவீடன் என்பன நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்ததும், அதில் பின்லாந்து இணைந்துகொண்டதும், சுவீடன் அனுமதிக்காக காத்திருப்பதும் நாம் அறிந்ததே.