ஜனாதிபதித் தோ்தலில் பொதுஜன பெரமுன ரணிலை ஆதரிக்க முடிவு – பேச்சுக்களில் கணிசமான ஆதரவு

ஜனாதிபதித் தோ்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராகப் போட்டியிட ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசின் உயர்மட்டத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கின்ற நிலையில், அந்தக் கட்சியின் மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் சம்மேளனத்தினர் ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு பஸில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் இடம்பெற்ற ஒன்றாகும். மறுபுறம் ஐக்கிய தேசியக் கட்சியும் பல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது. அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில், பொதுஜன பெரமுனவின் மற்றொரு தரப்பினா் பிரபல வா்த்தகா் தம்மிக்க பெரேராவை தமது வேட்பாளராக களமிறக்க வேண்டும் என வலியுறுத்திவருவதாகத் தெரிகின்றது. இதன் அடிப்படையிலேயே கட்சியின் பொது நிகழ்வுகளில் அவா் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.